அதிகாரப் பகிர்வு தொடர்பாக பா.ஜ.க மற்றும் சிவசேனா இடையே எந்த ஒரு ஒப்பந்தமும் செய்யப்படவில்லை என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா சட்டசபையின் பதவிக் காலம் இன்றுடன் (வெள்ளிக்கிழமை) முடிவடைகிறது.
மும்பையில் பா.ஜ.க தலைவர்களுடன் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி இன்று ஆலோசனை நடத்தினார். இதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் மேற்படி குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், “சிவசேனாவுடன் சமமான அதிகாரப் பகிர்வு தொடர்பாக பா.ஜ.க எந்த ஒரு ஒப்பந்தமும் செய்து கொள்ளவில்லை.
சிவசேனாவின் தலைவரான மறைந்த பால்தாக்கரே கூட, எந்த கட்சி பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றிருக்கிறதோ அக்கட்சிக்குத்தான் முதல்வர் பதவி என்பதை முன்னர் கூறியிருந்தார்” எனத் தெரிவித்துள்ளார்.
சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி 2 வாரங்களாகியுள்ள நிலையில், பா.ஜ.க தலைமையிலான அரசியலில் சமமான அதிகாரப் பகிர்வு, சுழற்சி முறையில் முதல்வர் பதவி ஆகிய நிபந்தனைகளை சிவசேனா முன்வைக்கிறது. இவற்றை பா.ஜ.க நிராகரித்து வருவதால் புதிய அரசு அமைவதில் இழுபறிநிலை ஏற்பட்டுள்ளது.
இன்று இரவுக்குள் புதிய அரசு அமையாத நிலையில் மஹராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமுலுக்கு வரக் கூடிய வாய்ப்புகள் உள்ளன. இதனால் மஹராஷ்டிரா அரசியலில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.