கடந்த அரசாங்கம் ஆரம்பித்துள்ள அரசியல் யாப்பு சீர்திருத்த பணிகளை முன்னெடுத்து அதனூடாக சிறுபான்மை மக்களுக்கான அதிகாரப் பகிர்வை வழங்க வேண்டும் எனவும் சிவில் அமைப்பினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இது தொடர்பாக அந்த அமைப்பு இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுத்துள்ள ஊடக அறிக்கையில், “இலங்கையின் ஏழாவது ஜனாதிபதி தேர்தலில் வடகிழக்கு தமிழர்களாகிய நாம் மீண்டும் ஒரு வரலாற்று பதிவை ஏற்படுத்தியுள்ளோம்.
இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் தொட்டு தமிழ் மக்கள் இலங்கையின் ஒரு தேசிய இனம் என்ற அடிப்படையில் தனக்கான உரிமைகளுக்காக போராடி வருகின்றனர்.
இலங்கையின் சுயநிர்ணய உரிமை கோரிக்கைக்கு உரித்துடைய தனியான இனக் குழுமம் என்ற அடிப்படையில் இலங்கையில் தனியான தாயகம், மொழி, பண்பாடு, கலாசார வரலாற்றைக் கொண்ட இனம் என்ற அடிப்படையில் நடந்து முடிந்த ஏழாவது ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் ஆகிய நாம் எமது தனித்துவத்தை மேலும் நிரூபித்துள்ளோம். எழுபது ஆண்டுகளைக் கடந்தும் தமிழர் தேசம் மீண்டும் தனது தனித்துவத்துடன் தனியாக நிமிர்ந்து நிற்கிறது.
அகிம்சை போராட்டக் காலத்திலும், ஆயுதப் போராட்ட காலத்திலும் தமிழ் மக்கள் எந்த நிலைப்பாட்டை எடுத்தார்களோ அதே நிலைப்பாட்டை யுத்தம் நிறைவடைந்து பத்து ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் கையில் எடுத்து பயணிக்கின்றனர். நடந்தது முடிந்த ஜனாதிபதி தேர்தலில் வடகிழக்கு தமிழர்கள் தங்களது உரிமைக்காக மீண்டும் தன்னெழுச்சியாக ஒன்றுபட்டு நிற்கின்றனர்.
இதன் ஊடாக தமிழர் தேசம் சிங்கள தேசத்திற்கு மீண்டும் மீண்டும் தங்களது சுயநிர்ணய உரிமைக்கான கோரிக்கையை பறைசாற்றியுள்ளது. தமிழர்கள் இலங்கை பூமிப்பந்தில் தங்களது வாக்குகளைக் கொண்டு ஜனநாயக ரீதியில் ஒரு வரைபடத்தை மீண்டும் உருவாக்கி காட்டியுள்ளனர்.
இதன் ஊடாக தமிழ் மக்கள் இந்த நாட்டில் கோரி நிற்பது அபிவிருத்தியையோ அல்லது சலுகைகளையோ அல்ல. சுயநிர்ணய உரிமையுடன் வாழக்கூடிய அதிகாரப் பகிர்வையே வேண்டி நிற்கின்றனர்.
இந்து சமுத்திரத்தின் முத்து என்று வர்ணிக்கப்படும் இலங்கை நாடு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்காது எந்தவித நிரந்தர அபிவிருத்தியையோ நல்லிணக்கத்தையோ கட்டியெழுப்ப முடியாது.
இந்த நாட்டில் தமிழ் மக்களின் உயிர் பலிகளும் தியாகங்களும் மதிக்கப்பட்டு அவர்களது தாயக பூமியில் அவர்கள் முழு அதிகாரம் கொண்ட மக்களாக ஒரு மித்த நாட்டுக்குள் வாழ்வதற்கு பதவி ஏற்கும் அரசாங்கம் வழிவகைகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.
வடகிழக்கு தமிழர் தேசத்துக்கு தனது நேசக்கரத்தை நீட்டி இந்த நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வை காண முன்வர வேண்டும்.
எனவே இந்த தேர்தலில் தமிழ் மக்களின் முடிவை முடிந்த முடிவாக எடுத்து இலங்கை அரசும் சர்வதேச நாடுகளும் சிறுபான்மை இன மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு திட்டம் ஒன்றை முன்வைத்து அல்லது கடந்த அரசு ஆரம்பித்துள்ள அரசியல் யாப்பு சீர்திருத்த பணிகளை முன்னெடுக்க வேண்டும்.
அதனூடாக சிறுபான்மை மக்களுக்கான அதிகாரப் பகிர்வை வழங்கி ஜனநாயக ரீதியில் பிளவுபட்டு நிற்கும் இரண்டு தேசங்களையும் ஒன்றாக்குவதற்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என இலங்கையில் புதிதாக பதவி ஏற்கவுள்ள ஜனாதிபதி அவர்களிடம் இந்த கோரிக்கைகளை முன்வைக்கின்றோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.