LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Saturday, November 9, 2019

யாழ். பல்கலை சட்டத்துறை தலைவர் குருபரன் நீதிமன்றங்களில் முன்னிலையாவதற்கு தடை!

யாழ்ப்பாணம், பல்கலைக்கழக சட்டத்துறைத்
தலைவர் கலாநிதி குமாரவடிவேல் குருபரனை நீதிமன்றங்களில் முன்னிலையாவதைத் தடை செய்யும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முடிவை யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பேரவை ஏற்றுக்கொண்டுள்ளதாக அறிய முடிகிறது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பேரவை இன்று (சனிக்கிழமை) முற்பகல் கூடிய நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் இந்த முடிவை சட்டத்துறைத் தலைவர் கலாநிதி குமாரவடிவேல் குருபரனுக்கு பல்கலைக்கழக தகுதிவாய்ந்த தரப்பு அறிவிக்கவேண்டும். அதுதொடர்பாக அவரால் மேன்முறையீடு முன்வைக்கப்படுமாயின் அதனை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிப்பது எனவும் பேரவை முடிவு செய்தது.

மேலும் கலாநிதி குமாரவடிவேல் குருபரனை நீதிமன்றங்களில் முன்னிலையாவதைத் தடை செய்யும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முடிவு தொடர்பாக ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தமை குறித்து இன்றைய பேரவைக் கூட்டத்தில் காரசாரமான விவாதம் இடம்பெற்றதுடன், இதுதொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகம் கவனம் செலுத்தவேண்டும் என்றும் பேரவை உறுப்பினர்கள் சிலர் வலியுறுத்தியிருந்தனர்.

பொதுநல வழக்குகள் பலவற்றை பாதிக்கப்பட்ட தரப்புகள் சார்பில் முன்னெடுத்து வருபவரும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சட்டத்துறைத் தலைவருமான கலாநிதி குமாரவடிவேல் குருபரனை நீதிமன்றங்களில் முன்னிலையாவதை தடை செய்யுமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு பணித்தது.

இலங்கை இராணுவத்தின் அழுத்தத்தின் பின்னணியில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இந்த பணிப்புரையை யாழ்ப்பாணம் பல்கலைக்கழக தகுதிவாய்ந்த அதிகாரி பேராசிரியர் க.கந்தசுவாமிக்கு வழங்கியுள்ளது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சட்டத்துறைத் தலைவர் கலாநிதி குமாரவடிவேல் குருபரன், பொதுநலம் சார்ந்த வழக்குகளில் 2011ஆம் ஆண்டு முதல் உயர் நீதிமன்றம், மேல் நீதிமன்றங்கள் உட்பட அனைத்து நீதிமன்றங்களிலும் முன்னிலையாகி வருகின்றார். பாதிக்கப்பட்ட பலருக்கு நீதியையும் பெற்றுக் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பின்னர் காணாமல் ஆக்கப்பட்டனர் என்று பெற்றோரால் தெரிவிக்கப்படும் இளைஞர்கள் 12 பேர் தொடர்பாக 2017ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் திகதி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் ஆட்கொணர்வு நீதிப்பேராணை மனுக்கள் தனித்தனியே தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை சட்டத்தரணி எஸ்.சுபாசினி தாக்கல் செய்தார்.

அந்த மனுக்களின் ஊடாக பாதிக்கப்பட்ட பெற்றோருக்கு நீதி கிடைக்கவேண்டும் என்று சட்டத்தரணி கலாநிதி கு.குருபரன் முன்னிலையாகி வாதாடி வருகிறார்.

இந்த ஆட்கொணர்வு நீதிப்பேராணை மனுக்களில் கலாநிதி குமாரவடிவேல் குருபரன் முன்னிலையாவது தொடர்பாகவே பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் இலங்கை இராணுவத்தால் முறையிடப்பட்டது.

அதனடிப்படையிலேயே யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சட்டத்துறைத் தலைவர் கலாநிதி குமாரவடிவேல் குருபரனை நீதிமன்றங்களில் முன்னிலையாவதைத் தடை செய்யும் தீர்மானத்தை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு எடுத்திருந்தது.

இந்தக் கடிதம் கடந்த ஒக்ரோபர் மாதம் 15ஆம் திகதி யாழ்ப்பாணம் பல்கலைக்கழக தகுதிவாய்ந்த அதிகாரிக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. அதுதொடர்பாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பேரவைக்கு அறிவிக்கும் பத்திரம் தகுதிவாய்ந்த அதிகாரியால் சமர்ப்பிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பேரவை இன்று முற்பகல் கூடியது. கலாநிதி கு.குருபரனின் விடயம் பிற்பகல் எடுத்துக்கொள்ளப்பட்டது.

நீண்ட விவாதத்தின் பின்னர் சட்டத்தரணி கலாநிதி குமாரவடிவேல் குருபரன் நீதிமன்றங்களில் முன்னிலையாகுவதற்கு தடை செய்யும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முடிவை ஏற்று அதுதொடர்பாக அவருக்கு அறிவிப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.

இதேவேளை, கலாநிதி குமாரவடிவேல் குருபரனை நீதிமன்றங்களில் முன்னிலையாகுவதைத் தடை செய்வது என்றும் அவர் பிரசித்த நொத்தாரிசு பணியை முன்னெடுக்க அனுமதியளிப்பது என்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக நிர்வாகம் சம்பந்தப்பட்டவருக்கு உரிய அறிவிப்பை வழங்காது இழுத்தடித்தமை தொடர்பாக பல்வேறு மட்டங்களில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7