செறிவூட்டலை ஈரான் விரிவுபடுத்துவதால், அந்த நாடு உலக அமைதிக்கு அச்சுறுத்தல் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது என அமெரிக்கா கூறியுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் மோர்கன் ஓர்டகஸ் தெரிவித்துள்ளார்.
இதன்போது, “அணு ஆயுதங்களுக்கான எரிபொருளைப் பெறும் வகையில், ஈரான் தனது அணுசக்தி திட்டங்களை விரிவுபடுத்துவது வியப்புக்குரிய தகவல் இல்லை. யுரேனியம் செறிவூட்டலை ஈரான் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது.
அணுசக்தி திட்டங்கள் குறித்து தனது வாக்குறுதிகளை மீறி, யுரேனியம் செறிவூட்டலை அதிகரித்து வருவதன் மூலம் ஈரான் தவறான திசையை நோக்கிச் செல்கிறது. மேலும், ஈரானால் உலக அமைதிக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் இருப்பதை இந்த நடவடிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.
ஃபோர்டோ நிலத்தடி அணுசக்தி மையத்தில் மட்டுமல்ல, வேறு எந்த மையத்திலும் யுரேனியம் செறிவூட்டலை விரிவுபடுத்துவதற்கு ஈரானிடம் நியாயமான எந்தக் காரணமும் இல்லை.
இந்த நடவடிக்கையால் அரசியல் ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் ஈரான் மேலும் தனிமைப்படுத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளுக்கும், ஈரானுக்கும் இடையே வரலாற்றுச் சிறப்பு மிக்க அணுசக்தி ஒப்பந்தம் கடந்த 2015ஆம் ஆண்டில் கையெழுத்தானது.
தங்களது அணுசக்தி திட்டங்கள் அணு ஆயுதங்கள் தயாரிப்பதற்கானவை அல்ல என்பதை ஈரான் உறுதி செய்யவும், அதற்குப் பதிலாக அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளை வல்லரசு நாடுகள் விலக்கிக் கொள்ளவும் இரு தரப்பிலும் அந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
அந்த ஒப்பந்தத்தில், அணுசக்தி எரிபொருளாகப் பயன்படும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை குறிப்பிட்ட அளவே ஈரான் கையிருப்பு வைத்திருக்க வேண்டும், அணுசக்தி மையங்களில் யுரேனியம் எரிபொருளை 3.67 சதவீதத்துக்கு மேல் செறிவூட்டக் கூடாது, முதல் தலைமுறையைச் சோ்ந்த ஐ.ஆா்.1 ரக சாதனங்களைக் கொண்டே யுரேனியம் சுத்திகரிக்கப்பட வேண்டும் என்று நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக கடந்த ஆண்டு மே மாதம் அறிவித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை மீண்டும் அமுல்படுத்தினார்.
அதற்குப் பதிலடியாக, மேற்கண்ட மூன்று நிபந்தனைகளை மீறுவதாக ஈரான் அறிவித்தது. இந்த நிலையில், 4ஆவது விதிமீறலாக, ஃபோா்டோ நகரிலுள்ள தனது நிலத்தடி அணுசக்தி மையத்தில் யுரேனியம் செறிவூட்டும் பணிகளை புதன்கிழமை நள்ளிரவு முதல் தொடங்கப் போவதாக ஈரான் நேற்று முன்தினம் அதிரடியாக அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.