2 இடைத்தேர்தல்களில் அ.தி.மு.க. அபார வெற்றி பெற்றதால், எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் கூட்டணி அமைத்தே போட்டியிடப் போவதாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
உள்ளூராட்சி தேர்தலை எதிர்கொள்வது குறித்து சென்னை அறிவாலயத்தில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
அக்கட்சி தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், கிராமம்தோறும் திண்ணை பிரச்சாரம் செய்தல், உள்ளூராட்சி தேர்தல் நடைபெறும் வரை தற்போதைய நிர்வாகிகள் அதே பொறுப்பில் நீடிக்க அங்கீகாரம் அளித்தல் உள்ளிட்ட 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், “உள்ளூராட்சி தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புவோர் நவம்பர் 14ஆம் திகதி முதல் 20ம் திகதி வரை விருப்ப மனு பெறலாம்.
உள்ளூராட்சி தேர்தலில் கூட்டணி அமைத்தே எதிர்கொள்கிறோம். திகதி அறிவிக்கப்பட்ட பின்னர், கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும். தேர்தலை சந்திக்க தி.மு.க. தயாராக உள்ளது. தேர்தலை ஆவலோடு எதிர்பார்க்கிறோம்” என ஸ்டாலின் கூறினார்.