நகைகளுக்கு பதிலாக தக்காளிகளால் தயாரிக்கப்பட்ட நகைகளை அணிந்திருக்கும் ஔிப்படங்கள் வைரலாகியுள்ளன.
பாகிஸ்தானில் தக்காளியின் விலை வெகுவாக உயர்ந்துள்ளது. இந்தியா, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் நாடுகளிலிருந்து தக்காளி இறக்குமதி தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.
ஒரு கிலோ தக்காளி அங்கு 300 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுவதால், சாதாரண மக்கள் தக்காளியை கொள்வனவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தக்காளி விலையைக் கட்டுப்படுத்த அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
தக்காளி விலை சடுதியாக அதிகரித்துவரும் நிலையில், இதனை உலகின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையிலும், பாகிஸ்தானின் மோசமான பொருளாதார நிலையை சுட்டிக்காட்டும் வகையிலும், அந்த நாட்டைச் சேர்ந்த மணப்பெண் ஒருவர் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளார்.
அந்த மணப்பெண் தனது திருமண நாளில் தங்க நகைகள் அணிவதற்கு பதிலாக தக்காளி நகைகளை அணிந்திருந்தார்.
கழுத்து, காது மற்றும் கைகளில் தங்க நகை போன்று தக்காளியை கோர்த்து செய்யப்பட்ட நகைகளை அவர் அணிந்து வந்திருந்தார். அதிலும் தலையில் நெத்திச்சுட்டியாகவும் ஒரு தக்காளி அலங்கரித்திருந்தது.
தங்கத்திற்கு நிகராக தக்காளியை ஒப்பிட்டிருந்த அவரது ஔிப்படங்கள், சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
அந்த மணப்பெண்ணிடம் உள்ளூர் செய்தியாளர் ஒருவர் நேர்காணல் மேற்கொண்ட காணொளியை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் கருத்து வௌியிட்ட மணப்பெண், தனது குடும்பத்தினர் தனக்கு திருமண சீதனமாக மூன்று கூடை தக்காளியை பரிசளித்திருப்பதாக குறிப்பிட்டார்.