நிலம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு நாளை வழங்கப்படவுள்ளதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
நாளை காலை 10.30 மணிக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு தீர்ப்பு அளிக்கவுள்ளதாக இன்று (வெள்ளிக்கிழமை) அறிவிக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசம் மாநிலம், அயோத்தியில் ராமஜென்மபூமி, பாபர் மசூதி அமைந்திருந்ததாக கூறப்படும் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தமானது? என்பதில் இன்னும் இறுதி முடிவு வரவில்லை.
இதுதொடர்பான வழக்கை விசாரித்து, இந்த நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய 3 அமைப்புகளும் சரிசமமாக பிரித்துக்கொள்ள வேண்டும் என்று 2010ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 30ஆம் திகதி அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றில் 14 பேர் மேன்முறையீடு செய்தனர். 9 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மேன்முறையீட்டு வழக்குகளில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் 5 பேரைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு தொடர்ந்து 40 நாட்கள் விசாரணை நடத்தி முடித்துள்ளது.
இந்த வழக்குகளின் விசாரணை கடந்த மாதம் 16ஆம் திகதி முடிந்து, தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், வரும் 17ஆம் திகதி ஓய்வு பெறவுள்ள நிலையில் அதற்கு முன்பாக அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த தீர்ப்பு நாடு முழுவதும் பெருத்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாவதைத் தொடர்ந்து மத்திய அரசு பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.