பாலியல் வழக்கு முக்கியமானது என்றும் அதில் சிக்கிய குற்றவாளிகள் குண்டர் சட்டத்திலிருந்து தப்பும் வகையில் தமிழக அரசு செயல்பட்டதை மன்னிக்க முடியாது எனவும் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் கருத்து தெரிவித்த தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ் அழகிரி, ”தமிழக அரசு சமுக நீதிக்கு எதிராகச் செயல்பட்டு வருகிறது. பொள்ளாச்சி பாலியல் வழக்கு என்பது இந்தியாவை புரட்டிப் போட்ட வழக்கு. இதில் ஏராளமான பெண்கள் சீரழிக்கப்பட்டுள்ளனர்.
அதற்காக, கைது செய்தவர்களின் குண்டர் சட்ட வழக்கை இரத்து செய்யும் விதத்தில் செயல்பட்டது மாபெரும் குற்றமாகும். இதனை மன்னிக்க முடியாது. நிர்பயா வழக்கை விட இந்த வழக்கு மிகவும் முக்கியமானது.
அதில் ஒரு பெண். இதில் பல பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும், முக்கியமான பிற நபர்களின் குடும்பங்கள் இதில் சம்பந்தப்பட்டுள்ளன. இந்த வழக்கை ரத்து செய்ததற்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்” என கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.