அசாஞ் மீது 2010 இல் சுமத்தப்பட்ட பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையை ஸ்வீடனில் உள்ள வழக்குரைஞர்கள் கைவிட்டுள்ளனர்.
இந்தக் குற்றச்சாட்டை மறுக்கும் அசாஞ், 2012 இல் லண்டனில் உள்ள ஈக்வடோரியன் தூதரகத்தில் தஞ்சம் புகுந்து ஏழு ஆண்டுகளாக சுவீடனுக்கு ஒப்படைக்கப்படுவதைத் தவிர்த்துள்ளார்.
48 வயதான ஆஸ்திரேலியர் ஜூலியன் அசாஞ் மே மாதம் ஈக்வடோர் தூதரகத்தில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டார்.
அத்துடன் பிணை நிபந்தனைகளை மீறியதற்காக அவருக்கு 50 வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
தற்போது அவர் லண்டனில் உள்ள பெல்மார்ஷ் (Belmarsh) சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பொது வழக்கு விசாரணையின் துணை இயக்குநர் ஈவா-மேரி பேர்சன் தெரிவிக்கையில்; ஜூலியன் அசாஞ் தொடர்பான விசாரணையை நிறுத்த ஸ்வீடிஷ் அரசு தரப்பு ஆணையம் முடிவெடுத்துள்ளது என்று கூறினார்.
இந்த முடிவிற்கான காரணம் விசாரணை நீண்ட காலமாகிவிட்டதுடன் சான்றுகள் மிகவும் பலவீனமடைந்துள்ளன என்று அரசு தரப்பு ஆணையம் கூறியுள்ளது.
பிரித்தானியாவில் அசாஞ்சினுடைய தண்டனைக் காலம் முடிவடைந்த பின்னர் அவர் அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படுவதற்கு உள்துறை அமைச்சராக இருந்த சாஜிட் ஜாவிட் அனுமதி வழங்கியிருந்தார்.
அமெரிக்க ரகசியங்கள் விக்கிலீக்ஸ் மூலம் வெளியானதைத் தொடர்ந்து அசாஞ்சை தம்மிடம் ஒப்படைக்குமாறு அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்வீடனின் விசாரணை எதைப் பற்றியது?
2010 இல் ஸ்ரொக்ஹோமில் (Stockholm) நடைபெற்ற விக்கிலீக்ஸ் மாநாட்டைத் தொடர்ந்து அசாஞ் அங்கு ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், மற்றொருவர் மீது பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டிருந்தார்.
எனினும் இந்தக் குற்றச்சாட்டுக்களை ஜூலியன் அசாஞ் எப்போதும் மறுத்து வருகிறார். அத்துடன் பாலியல் உறவு அவர்களின் சம்மதத்துடனேயே நடந்தது என்றும் கூறியுள்ளார்.