ஆதரவு தெரிவித்த வேட்பாளர் வெற்றிபெறாமல் போனால் எமக்கு சிரமமாக இருக்கும் என்பதனாலேயே மக்களை சிந்தித்து வாக்களிக்க கோரியதாக வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மேலும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் அறிக்கையை பரிசீலித்து வருவதாகவும் அடுத்த 3 நாட்களில் அதனை ஆராய்ந்து சரியான தீர்மானத்தை அறிவிப்போம் என்றும் அவர் கூறினார்.
யாழில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், வேட்பாளர்களில் அறிக்கையில் சிங்களம், தமிழ், ஆங்கிலம் என்ற மொழிகளில் சில வேறுபாடுகள் இருக்கலாம் என்பதனாலேயே தாமதம் ஏற்பட்டுள்ளது என்றும் கூறினார்.
அத்தோடு ஜனாதிபதி வேட்பாளர்களிடம் 13 அம்ச கோரிக்கைகள் தொடர்பான ஆவணங்கள் கையளிக்கப்பட்டுள்ளபோதும் ஒரேயொரு வேட்பாளர் மட்டுமே அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார் என்றும் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.
இந்த நிலையிலேயே தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்றவாறு மக்களை வாக்களிக்கும்படி தான் கேட்டுக்கொண்டதாகவும், எந்த வேட்பாளர்கள் தங்கள் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவிக்கின்றார்களோ அவர்களுடன் தமிழ் மக்களின் பிரச்சினைகளை கோரலாம் என்ற நோக்கோடே இந்த தீர்மானத்தை எடுத்ததாக சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.