மாற்றம் ஏற்படாவிட்டால், மாற்றுத்திட்டத்தை முன்னெடுக்க வேண்டி ஏற்படும் என முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.
ரணில் விக்ரமசிங்க தற்போதாவது தீர்மானம் ஒன்றுக்கு வந்தமைக்காக அவருக்கு நன்றி கூறுவதாகக் குறிப்பிட்ட ஹரின், எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பெறுவதற்கு எதிர்பார்த்து அவர் பயணத்தை முன்னெடுத்தால் அது சிறப்பாக அமையாது என சுட்டிக்காட்டினார்.
உண்மையான இதய சுத்தியுடன் மூன்று மாதங்கள் அவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கிவிட்டு, நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த அரசியலமைப்பிற்கு மதிப்பளித்து மார்ச் முதலாம் திகதி நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத்தேர்தலுக்கு செல்ல வேண்டும்.
எனவே, அதற்கு யார் தலைமைத்துவம் வழங்க வேண்டும் என்பது தொடர்பாக தம்மிடம் நிலைப்பாடொன்று உள்ளதாக ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
சில வேளை மீண்டும் கட்சிக்குள் பல்வேறு சவால்களை விடுத்து பிரச்சினைகளை ஏற்படுத்துவதற்கு முற்பட்டால், கட்சிக்கு மாற்றுத்திட்டமும் இல்லாமல் போய்விடும் என அவர் எச்சரிக்கை விடுத்தார்.
இதேவேளை எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு, கட்சியை ஒன்றிணைத்து முன்னோக்கி கொண்டு வந்தவரே தகுதியானவர் எனவும் ரணில் விக்ரமசிங்க அதற்கு வழிவிடாவிட்டால், புதிய கட்சியை உருவாக்குவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.