தொடர்பான வழக்கில் எம்.ஏ.சுமந்திரன் ஒரு தரப்பினர் சார்பாக ஆஜராகியுள்ளமையானது பக்கச்சார்பானது என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சமயோசிதமற்ற முடிவுகள் பெரும் அதிருப்தியை ஏற்படுத்துவதால் பிற வழிகள் குறித்து ஆலோசிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவோம் என மன்னார் மறைமாவட்ட பொது நிலையினர் ஆணைக்குழுவின் இயக்குநர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து மன்னார் மறைமாவட்ட பொது நிலையினர் ஆணைக்குழுவின் இயக்குநர் அருட்பணி ச.எமிலியான்ஸ் பிள்ளை அடிகளார் இன்று (செவ்வாய்க்கிழமை) அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.
குறித்த அறிக்கையில், “மன்னார் மறை மாவட்டமானது தமிழினத்தின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் பெரும்பங்காற்றியமை சர்வதேச ரீதியில் பேசப்பட்டு வருகின்றமை யாவரும் அறிந்ததே.
விடுதலைப் போராட்ட காலத்தில் தமிழ் அரசியல் தலைமைகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பேசுவதற்கு அஞ்சி ஒதுங்கிய வேளையில், உயிராபத்துகளும் அச்சுறுத்தல்களும் நிறைந்த அக்கால கட்டத்தில் ஒட்டு மொத்த தமிழினத்தின் உரிமைக்காக குரல் கொடுத்தது மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஆண்டகை அடிகளாவார்.
அவரின் அன்புப் பணிப்பிற்கு கட்டுப்பட்ட கத்தோலிக்க குருக்கள் பலர் சமர் நடந்துகொண்டிருந்த இடங்களில் மக்களுக்காக பணியாற்றி தமது இன்னுயிரை அர்ப்பணித்து இருக்கின்றார்கள் என்பதை தமிழ் மக்கள் மறக்க மாட்டார்கள்.
அடித்து நொருக்கப்பட்டு நாதியற்று வன்னியிலிருந்து கொண்டு வரப்பட்ட தமிழ் உறவுகளை மன்னார் கத்தோலிக்க மக்கள் தங்கள் இதயங்களில் குடியிருத்தியமையை யாரும் மறந்து விட முடியாது.
1990 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை நடை பெற்ற இச் சம்பவங்களை மறப்பது வட புல தமிழ் மக்களுக்கு இயலாத ஒன்றாகும்.
இவற்றையெல்லாம் நாம் அரசியல் இலாபம் கருதியோ, சுய பொருளாதார அபிவிருத்தி கருதியோ பணியாற்றவில்லை என்பது சொல்லிப் புரிவதற்கில்லை.
இது இவ்வாறிருக்க மன்னாருக்கு தொழில் நிமிர்த்தமும், உத்தியோக இடமாற்றத்தைக் கருத்திற் கொண்டும் குடியேறிய சிலர் தமது இருப்புகளை தக்கவைத்துக் கொள்ளவும், சமுதாய அரசியல் மதிப்புகளை தமதாக்கவும் ஒரே குடும்பமாக வாழ்ந்த கபடமறியாத மன்னார் மக்களிடம் மதம் எனும் பிரிவினைவாதத்தை விதைக்கின்றார்கள்.
ஒரே அமர்வில் பேசித் தீர்க்க வேண்டிய பிரச்சினையை ஊதிப் பெரிதாக்கி அதில் அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கும் குழுவினர் முன்னெடுக்கின்ற பிரச்சினை தான் திருக்கேதீச்சர வளைவு குறித்த பிரச்சினை.
வட புலத்திலே பெரும்பான்மையாக வாழுகின்ற இந்து சகோதரர்கள் மத்தியில் தமக்காக தமது பிரச்சினைக்காக வாதிட்டு தமது உரிமைகளை வென்று தருகின்ற ஒருவராக தன்னை காட்டிக்கொள்ளும் முயற்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமத்திரன் நேற்று திருக்கேதீச்சர வளைவு வழக்கில் ஆஜராகி இருந்தமை மன்னார் வாழ் மக்களின் மனதில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழரின் பிரச்சினைகள் பட்டியலிட்டு பல இருக்கும்போது மத ரீதியாக மக்களை பிளவடைய வைக்கும் இவ்வாறான சம்பவங்களில் தமிழ் தலைமைகள் ஈடுபடுவது கத்தோலிக்க மக்களின் மனங்களை புண்படுத்துகின்றது.
தமிழ் மக்கள் நம்பியிருந்த தலைமைகள் இதுவரை எந்த ஆக்கபூர்வமான முயற்சிகளையும் தமிழின மீட்சிக்காகவோ, காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகவோ செய்திராத நிலையில் அவர்கள் அடுத்த கண் துடைப்பு அரசியலாக மதவாதத்தினைக் கையில் எடுப்பதை எந்த தமிழ் மக்களும் ஏற்றுக் கொள்ளத் தயாரில்லை.
தமிழ் தலைமைகளாக காட்டிக் கொள்ளும் மேற்குறித்த திருக்கேதீச்சர விவகாரத்தில் தலையிட்டு அதை சுமுகமாக முடிக்காது ஒரு தரப்பிற்காக வாதாடும் கைங்கரியம் என்ன? கடந்த காலத்தில் ஒரு நோக்கோடு போராடிய தமிழினம் பிரிந்து போகக் காரணம் என்ன?
ஆரம்பத்தில் இனப்பிரச்சினையால் தமிழ் மக்கள் ஒடுக்கப்பட்டனர். பின்பு பிரதேச வாதத்தால் தமிழ் மக்கள் ஒடுக்கப்பட்டனர். தற்போது மத ரீதியில் முறுகலை ஏற்படுத்தி தமிழர் என்ற இனத்தினை முடிவுக்கு கொண்டு வரும் சூட்டுமத்தினை சிங்களத் தலைமைகள் முன்னெடுக்கின்றன.
அதற்கு தமிழ் தலைமைகள் மௌனம் காப்பதும், தோள் கொடுத்து உழைப்பதுமாக இருப்பது தமிழினத்தின் எதிர்காலத்தினை கேள்விக்குறியாக்கி தமிழ் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் மன்னார், வவுனியா மற்றும் வட புலமெங்கும் பரவி வாழ்கின்ற மன்னார் மறை மாவட்ட ஒட்டு மொத்த தமிழின மக்களின் குரலாக இணைந்து, தமிழினத்தின் தலைமைகள் என தம்மை காட்டிக்கொள்ள முனையும் அனைவருக்கும் குறிப்பாக கூட்டமைப்பினருக்கு ஒரு விடயத்தை பகிரங்கமாக வலியுறுத்த விரும்புகின்றோம்.
எமது கத்தோலிக்க மக்கள் ஒரு தலைமைக்கு கட்டுப்பட்டவர்கள். இன்னமும் எமது தலைமையின் அன்புக் கட்டளைக்கு கீழ்ப்படிந்து உள்ளார்கள்.
கூட்டமைப்பின் சமயோசிதமற்ற, தொலைநோக்கற்ற முடிவுகள் எமக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்துவதால் நாம் பிற வழிகள் குறித்து ஆலோசிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.