பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்ட முயற்சி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்து்ளளார்.
அத்துடன், தமிழ் தேசியக் கட்சிகள் இணைந்து உருவாக்கிய 13 அம்சக் கோரிக்கைகளும் தொடர்ந்தும் வலுவாகவே இருக்கும் எனவும் பல்கலைக்கழக மாணவர்களின் முயற்சி தோல்வியடையவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் முயற்சி குறித்து பல்வேறு கருத்துக்கள் வெளியாவது தொடர்பாக இன்று (சனிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தெரிவிக்கையில், “யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் ஜனாதிபதி தேர்தலில் தமிழ கட்சிகளை ஒன்றிணைத்து பொதுக் கோரிக்கையை முன்வைக்க எடுத்த முயற்சி தோல்வியடைந்து விட்டதாக சிலர் கூறுகின்றனர்.
ஆனால் என்னுடைய பார்வையில் அந்த முயற்சி தோல்வியடையவில்லை. ஜனாதிபதி தேர்தலில் தமிழ கட்சிகள் ஒருமித்த நிலைப்பாட்டுக்குள் வரவேண்டும் என்று யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் முயற்சி எடுத்தனர்.
அதில் கலந்துகொண்ட தேசியம் சார்ந்த ஆறு கட்சிகளும் இணைந்து 13 அம்சக் கோரிக்கைகளை உருவாக்கியிருந்தோம். எனினும் துரதிஷ்டமாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் 14 ஆவது கோரிக்கையாக இடைக்கால வரைபை நிராகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை கொண்டுவந்தனர்.
இந்நிலையிலேயே அவர்கள் கூட்டிலிருந்து வெளியேறினர். எனினும் ஐந்து தமிழ கடசிகளும் கையொப்பம் இட்ட கோரிக்கைகளை தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் ஏற்றிருந்தது. எனவே இதனை ஐந்து தமிழ கட்சிகளின் கூட்டு என்பதை விட ஆறு தமிழக் கட்சிகளும் இணைந்தே கோரிக்கையை தயாரித்தது எனலாம்.
தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் முதன்முறையாக தேசியத்தை வலியுறுத்தும் ஆறு தமிழ கடசிகள் ஒண்றிணைந்து கோரிக்கைகளை ஆவணப்படுத்தியுள்ளமை வரலாற்றுப் பதிவு என்றே நான் கருதுகின்றேன்.
ஆகவே யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் முயற்சி வெற்றியென்றே கூற வேண்டும். மாணவர்கள் தலைமையில் உருவாக்கப்பட்ட 13 அம்சக் கோரிக்கைகளும் தொடர்ந்து வலுவாகவே இருக்கும். இந்த கோரிக்கைகளை முழுமையாகவோ பகுதியாகவோ அரசியல் கட்சிகள் பின்தொடரலாம். அவற்றை செயற்படுத்தலாம்.
அதில் உள்ள அனைத்தையும் நிறைவேற்றாது போனாலும் பலவற்றை நிறைவேற்றலாம். ஆகவே இது தமிழ் மக்களுக்கும் தமிழ் தேசியக் கட்சிகளுக்கும் முக்கிய ஆவணமாகவே இருக்கின்றது” என்று தெரிவித்துள்ளார்.