முதியோர்களுக்கு உதவித்தொகை வழங்கவுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
அத்துடன், முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான சொத்து மதிப்பு ரூ.1 இலட்சமாக இருந்தாலும் உதவித்தொகை வழங்கப்படும் என முதலமைமைச்சர் தெரிவித்துள்ளார்.
சேலத்தில் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நங்கவள்ளி, எடப்பாடி, கொங்கணாபுரம் ஒன்றியங்களில் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தின் கீழ் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று (செனிக்கிழமை) நடைபெற்றது.
இதன்போது அவர் தெரிவிக்கையில், “தமிழகம் முழுவதும் பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தின் கீழ் இதுவரை 9 இலட்சத்து 72 ஆயிரத்து 216 மனுக்கள் பெறப்பட்டன.
இதில், தகுதியுள்ள 5 இலட்சத்து 11 ஆயிரத்து 186 மனுக்கள் ஏற்கப்பட்டு, பல்வேறு காரணங்களால் 4 இலட்சத்து 37 ஆயிரத்து 492 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இதுதவிர, 23 ஆயிரத்து 538 மனுக்கள் நிலுவையில் உள்ளன.
அதேசமயம், நிராகரிக்கப்பட்ட மனுக்களை மீண்டும் பரிசீலனை செய்து அந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன். தமிழகம் முழுவதும் 5 இலட்சம் முதியோர்களுக்கு உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
.அதாவது, முதியோர் உதவித்தொகை பெற சொத்து மதிப்பு ரூ.50 ஆயிரம் என்று இருந்ததை மாற்றி ரூ.1 இலட்சம் சொத்து மதிப்பு இருந்தாலும் உதவித்தொகை வழங்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
இதேவேளை, காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள் அடிக்கல் நாட்டப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மத்திய, மாநில அரசுகள் இணைந்து அந்த திட்டத்தை செயற்படுத்தும்.
அதாவது, கோதாவரி-காவிரி, காவிரி-குண்டாறு இணைப்பு திட்டம் நிறைவேற்றப்படும் பட்சத்தில் கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, தேனி, இராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல் என தென் மாவட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு தங்கு தடையின்றி தண்ணீர் கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்துள்ளார்.