மருத்துவ பணியிடங்கள் நிரப்பப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள அரச மருத்துவமனைகளில் மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியம் வாயிலாக 4,500 மருத்துவ பணியிடங்கள் இம்மாத இறுதிக்குள் நிரப்பப்படவுள்ளது.
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நவீன அறுவை சிகிச்சை அரங்கை நேற்று (சனிக்கிழமை) பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு, அம்மா காப்பீடு திட்டத்தின் கீழ் முட நீக்கியல் துறை சார்பில் நவீன அறுவை சிகிச்சை அரங்கு, ரூ.150 கோடி மதிப்பில் கட்டப் பட்ட பன்நோக்கு சிறப்பு மருத்துவ மனையில் அதிநவீன ஐந்து அறுவை சிகிச்சை அரங்கு உள்ளிட்டவற்றை பார்வையிட்டு மக்கள் பயன்பாட்டுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.
இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அதிநவீன இதய அறுவைச் சிகிச்சை, உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படும். விபத்துக்கான சிறப்பு சிகிச்சை மையம் புனரமைக்கப்பட்டு உள்ளது.
அரசு மருத்துவர்களின் கோரிக்கையை அரசு பரிசீலனை செய்யும். மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் வாயிலாக தேர்வு செய்யப்பட்ட 9,533 செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டனர். ஊதியத்தை உயர்த்துமாறு அவர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, இரண்டு மடங்காக ஊதியம் உயர்த்தப்பட்டு உள்ளது.
இந்நிலையில், இம்மாத இறுதிக்குள் 2,345 தாதியர்கள், 1,234 கிராமப் புற தாதியர்கள், 90 பிஸியோ தெரபிஸ்ட்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட 4,500 பணியிடங்கள் மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியம் வாயிலாக நிரப்பப்படும்” என்றார்.