கிரெய்சில் அமைந்துள்ள தொழிற்சாலைப் பகுதியில் லொறி கொள்கலன் ஒன்றினுள்ளிருந்து உயிரிழந்து காணப்பட்ட 39 பேரும் உத்தியோகபூர்வமாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்து காணப்பட்ட 31 ஆண்கள் மற்றும் 8 பெண்களும் வியட்நாமைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்ததைத் தொடர்ந்து இவர்களை அடையாளம் காண்பதற்காக எசெக்ஸ் பொலிஸார் வியட்நாம் பொலிஸாருடன் இணைந்து பணியாற்றினர்.
இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் இறந்தவர்கள் அடையாளம் காணப்படுவது இந்த சம்பவம் தொடர்பான விசாரணையில் ஒரு முக்கியமான படியாகும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட குறித்த லொறியின் சாரதியான வடக்கு அயர்லாந்தைச் சேர்ந்த 25 வயதான மோரிஸ் ரொபின்சன் செல்ம்ஸ்ஃபேர்ட் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
மேலதிக வழக்கு விசாரணைக்காக நொவம்பர் 25 அன்று மத்திய குற்றவியல் நீதிமன்றத்தில் லொறியின் சாரதி ரொபின்சன் முன்னிலைப்படுத்தப்படவுள்ள நிலையில் தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஐரோப்பிய கைது பத்திரத்தின் மூலம் கைது செய்யப்பட்ட வடக்கு அயர்லாந்தைச் சேர்ந்த 23 வயதான ஏமன் ஹரிசன் டப்ளின் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவரை எசெக்ஸ் பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.
இதேவேளை இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கும் வடக்கு அயர்லாந்தைச் சேர்ந்த சகோதரர்களான 40 வயதான ரோனன் ஹியூஸ் மற்றும் 34 வயதான கிறிஸ்ரோபர் ஹியூஸ் ஆகியோரை உடனடியாகச் சரணடையுமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அத்துடன் இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 11 பேர் வியட்நாமின் இரண்டு மாகாணங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்