வெற்றி விழா இராணுவ அணிவகுப்பில் கலந்துகொள்ளுமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அப்போது அமெரிக்காவில் தேர்தல் பிரசார நேரம் என்பதால் விழாவில் கலந்துகொள்வது குறித்து ஆலோசித்து வருவதாக ட்ரம்ப் கூறியுள்ளார்.
இது குறித்து ட்ரம்ப் ஊடகங்களிடம் இன்று (சனிக்கிழமை) தெரிவிக்கையில், “அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்றதிலிருந்து நான் இன்னும் ரஷ்யாவுக்கு விஜயம் செய்யவில்லை.
1945இல் இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனியின் நாசிப் படைகளை ரஷ்யா வென்ற 75ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் ரஷ்யாவின் போர் வெற்றி தினத்தை முன்னிட்டு நடைபெறும் இராணுவ அணிவகுப்பு விழாவில் பங்கேற்க புடின் எனக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதற்காக நான் புடினைப் பாராட்டுகிறேன்.
அவர் அழைப்பு விடுத்துள்ள நேரம் எங்களுக்கு அமெரிக்காவில் தேர்தல் பிரசாரம் மும்முரமாக உள்ள நேரம். எனவே என்னால் அவரின் அழைப்பை ஏற்க முடியுமா என்று முயற்சி செய்து பார்க்கிறேன். ஆனால் என்னால் முடிந்தால் நிச்சயம் ரஷ்ய விழாவில் கலந்துகொள்ள செல்வதையே விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனியின் நாஜிப் படையை ரஷ்யா வென்றதை நினைவுகூரும் வகையில், 75ஆவது ஆண்டு வெற்றி தினத்தை முன்னிட்டு 2020 மே மாதத்தில் இராணுவ அணிவகுப்பு விழாவை மொஸ்கோவில் விமரிசையாக கொண்டாட ரஷ்யா திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.