முன்வைத்த 13 அம்ச கோரிக்கைகளில் புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் அறிக்கையில் 8 முக்கிய கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளன என வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க் கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்தார்.
மேலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தமிழர்கள் விடயத்தில் என்ன செய்வேன் என்று தேர்தல் அறிக்கையில் சொன்னாரோ அதனைவிடக் குறைவான விடயங்களே சஜித்தின் அறிக்கையிலே உள்ளன என்றும் சுட்டிக்காட்டினார்.
யாழ்ப்பாணம் கொக்குவிலில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், “ஜனாதிபதி தேர்தலின்போது அதில் போட்டியிடுபவர் தாங்கள் வெற்றி பெற்றதும் தங்களால் செய்ய முடிந்தவற்றை மட்டுமே கூறவேண்டும். குறிப்பாக ஜனாதிபதியால் என்னென்ன செய்ய முடியுமோ அவற்றையே கூற வேண்டும்.
புதிய ஜனநாயக முன்னணியின் சார்பாக வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அறிக்கையில் நாடாளுமன்றத்தினால் செய்ய வேண்டிய விடயங்கள், அமைச்சரவையினால் செய்யப்பட வேண்டிய விடயங்கள் எல்லாவற்றையும் தான் செய்வேன் எனக் கூறுகின்றார்.
19 ஆவது திருத்த சட்டத்தின் படி இனிவரவுள்ள ஜனாதிபதிக்கு வரையறுக்கப்பட்ட சில அதிகாரங்கள் மட்டுமே இருக்கும். மிகுதி அதிகாரங்கள் பிரதமருக்கே செல்லும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
மிக முக்கியமாக சஜித்தின் தேர்தல் அறிக்கையில் அரச படைகளுக்கு தேவையற்ற காணிகள் விடுவிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. அப்படியாயின் காணி விடுவிப்பு எந்தளவுக்கு இருக்கும் என்பதில் சந்தேகம் உள்ளது.
ஆனால் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் அறிக்கையில் அரச, மற்றும் தனியார் காணிகள் இராணுவத்தின் பிடியில் இருந்து விடுவிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனை கோட்டாபய ராஜபக்ஷ தரப்பினரும் ஏற்கனவே கூறியுள்ளனர்.
இன்றுகூட தொல்லியல் திணைக்களம் சஜித் பிரேமதாசவிடம் உள்ளது. வடக்கு கிழக்கில் அந்த திணைக்களத்தினால் அபகரிக்கப்பட்டுள்ள நிலங்களில் சிறிய அளவுகூட விடுவிக்கப்படவில்லை. அவரால் அதனை கூட செய்ய முடியவில்லை” என தெரிவித்தார்.