உலக நாடுகள் பலவற்றில் நிகழ்ந்த நாச வேலைகளுக்குக் காரணமாக இருந்த ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி அமெரிக்கப் படைகளால் கடந்த சனிக்கிழமை கொல்லப்பட்டார்.
சிரியா நாட்டின் வடமேற்குப் பகுதியில் இட்லிப் என்ற இடத்தில் அல் பாக்தாதி பதுங்கியிருப்பதாக அமெரிக்கப் படைக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவர் மறைந்திருந்த கட்டிடத்துக்குள் அதிரடியாகப் புகுந்த அமெரிக்கப் படையினர் தாக்குதல் நடத்தினர்.
அமெரிக்கப் படையினருடன் கொண்டு செல்லப்பட்ட நாய்களால் துரத்தப்பட்ட அல் பக்தாதி, ஒரு குகை போன்ற சுரங்கத்துக்குள் புகுந்தார். அங்கிருந்து வெளியேற வழி இல்லாத நிலையில், தன் உடலில் கட்டி இருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து மரணம் அடைந்தார்.
இதனைத் தொடர்ந்து பக்தாதி இறந்த செய்தியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதிப்படுத்தினார். இந்த நிலையில் அபுபக்கர் அல் பக்தாதியைத் தேடும்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சியை அமெரிக்க இராணுவம் வெளியிட்டுள்ளது.