பெரும்பாலான உறுப்பினர்கள் சஜித்துக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளதாக தேசிய ஜனநாயக முன்னணியின் பொலன்னறுவை மாவட்ட செயற்பாட்டாளர் எம்.எம்.டொனல் தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவை, மெதனகிரியவில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் கூறுகையில், “நான் கடந்த 12 வருடங்களாக சஜித்தினுடைய அரசியல் பயணத்தில் பங்கேற்று வருகின்றேன்.
எனவேதான் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொலன்னறுவை மாவட்டத்துக்கான தேர்தல் செயற்பாடுகளை சஜித் என்னிடம் ஒப்படைத்துள்ளார். அவரது நம்பிக்கை வீண்போகாதளவு அவர் நாட்டின் ஜனாதியாக வருவதற்கான வேலைத் திட்டங்களை நான் முன்னெடுப்பேன்.
இதேவேளை ஜனாதிபதியின் தீர்மானத்துக்கமையவே பொதுஜன பெரமுனவுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிஆதரவு வழங்கியுள்ளது.
ஆனாலும் அதிலுள்ள பெரும்பாலான உறுப்பினர்களுக்கு பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவு வழங்க விருப்பமில்லை என்பததை அவர்களுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் ஊடாக தெரிந்துகொண்டோம்.
எனவே நாட்டை சிறந்த பாதையை நோக்கி கொண்டு செல்லக்கூடிய சஜித்துக்கு ஆதரவு வழங்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் முன்வந்துள்ளனர்.
இன்னும் இரண்டு நாட்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதேச சபை உறுப்பினர்கள் எம்முடன் வந்து இணைவார்கள்.
அந்தவகையில் எம்முடன் இணையும் அனைவரையும் ஒன்றிணைத்துக் கொண்டு சஜித்தை நாட்டின் ஜனாதியாக வரவைப்பதற்கு முயற்சிப்போம்” என குறிப்பிட்டுள்ளார்.