புத்தசாசனத்திற்கு முன்னுரிமை வழங்குவதுடன் ஏனைய மதங்களுக்கும், இனத்தவர்களுக்கும் உரிய நிலை வழங்கப்படும் என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அத்துடன் அனைத்து மதங்களையும் பாதுகாக்கும் ஏற்பாடுகளும் பாரபட்சமின்றி முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜாதிக ஹெல உறுமய அமைப்பின் தேசிய மாநாடு இன்று (வெள்ளிக்கிழமை) கொழும்பு கெம்பல் மைதானத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் கூறுகையிர், “ஒருமித்த நாடு அனைவருக்கும் உரித்துடையதாக்கப்படும். புத்தசாசனத்திற்கு முன்னுரிமை வழங்குவது உறுதிப்படுத்தப்பட்ட விடயம். எனினும் ஏனைய இனத்தவர்களுக்கும், அவரவர் பின்பற்றும் மதங்களுக்கும் உரிய நிலையினை வழங்குவதுடன் அவை பாதுகாக்கப்பட வேண்டும்.
ஆகவே ஐக்கிய தேசியக் கட்சியும், ஜாதிக ஹெல உறுமயும் அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒன்றிணைய வேண்டும் என அழைப்பு விடுக்கின்றேன்.
அரசியலமைப்பு ரீதியில் அனைவருக்கும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். சிறந்த அரசாங்கத்தை கட்டியயெழுப்ப வேண்டுமாயின் பாரபட்சமின்றிய நிர்வாகம் செயற்படுத்த வேண்டும்.
மக்களின் பிரதிநிதிகளே அரச நிர்வாகத்தை முன்னெடுக்க வேண்டுமே தவிர ஒரு குடும்பம் ஒட்டுமொத்த அரச நிர்வாகத்தையும் முன்னெடுக்கக் கூடாது என்பதை நாட்டு மக்கள் தீர்மானிக்க வேண்டும்.
ஒரு குடும்பம் அரசாங்கத்தின் அனைத்து அதிகாரங்களையும் செயற்படுத்துவதும், கட்டுப்படுத்துவதும் ஜனநாயகத்திற்கு முற்றிலும் முரணானது. கடந்த காலங்களில் இவ்வாறான நிலைமையே காணப்பட்டது. பாரிய போராட்டத்தின் மத்தியில் அவற்றை முழுமையாக மாற்றியமைத்துள்ளோம்.
எனவே அரச நிர்வாகத்தை மக்களே தீர்மானிக்கும் யுகம் தோற்றுவிக்கப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.