சேலத்தில் இன்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர், தமிழகத்தில் உள்ள அரச மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் ஒரு மாணவருக்கு அரசு 1.24 கோடி ரூபாய் அளவுக்கு செலவு செய்வதாக தெரிவித்தார்.
அத்தோடு அரசக் கல்லூரியில் பயிலும் மாணவர் ஆண்டுக்கு 13 ஆயிரம் ரூபாய் மட்டுமே கட்டணம் செலுத்துகிறார்கள் என்றும் கூறினார்.
எனவே படித்துவிட்டு, அரச மருத்துவமனையில் அவர்கள் சேவை நோக்கத்தோடு பணியாற்ற வேண்டும் என்றும் அரச பணியில் சேர்ந்த பின்னர் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றித் தருகிறோம் என்றும் முதல்வர் தெரிவித்தார்.
ஆனால், தற்போது சேவை நோக்கத்தை மறந்து மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் என தெரிவித்த முதல்வர், மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்குத் திரும்பவில்லை என்றால், அமைச்சர் அறிவித்தது போல, மருத்துவர்களின் பணியிடங்கள் காலியானதாக அறிவிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
எனவே போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டால், பிடிவாதம் காட்டும் மருத்துவர்களை அரசாங்கம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என்றும் போராட்டம் தொடர்ந்தால் மருத்துவர்கள மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் எச்சரித்துள்ளார்.