புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவிற்கு ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் ஒன்றியம் ஆதரவளிப்பதற்கு முன்வந்திருக்கும் நிலையில், அதனை அறிவிக்கும் நிகழ்வு இன்று (செவ்வாய்கிழமை) கொழும்பிலுள்ள இலங்கை மன்றக்கல்லூரியில் நடைபெற்றது.
இங்கு கருத்து தெரிவித்த அவர் “மேலும் நான் ஆட்சியமைத்த பின்னர் சர்வதேச தரநியமங்களுக்கு அமைவான ஊடகப் பயிற்சி நிலையமொன்றை அமைத்து அதனூடாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்குப் பயிற்சியளிப்பதற்குத் திட்டமிட்டிருக்கிறேன்.
அதன்மூலமாக தேசிய, சர்வதேச ஊடகவியலாளர்களுக்கு இடையிலான ஊடாட்டத்தை ஏற்படுத்தி மக்களுக்கு சரியான முறையில் தகவல்களை வழங்கமுடியும்.
ஊடகவியலாளர்களின் கைகளில் தற்போது முக்கியமானதொரு பொறுப்பு உண்டு. கடந்த காலத்தில் நானும், எனது பிரதிவாதியும் ஊடகங்களை எவ்வாறு கையாண்டோம் என்பதை சீர்தூக்கி ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
நான் என்னுடைய அரசியல் பயணத்தில் ஹிட்லர், இடியமீன், ரொபேட் முகாபே ஆகியோரைப் பின்பற்றி, அவர்களை போல உருவாக வேண்டுமென்ற எண்ணத்தில் எப்போதும் பயணித்ததில்லை.
நாட்டு மக்களுக்கு உண்மைகளைக் கூறத்தக்க, அரசியல்வாதிகளுக்குப் பாடம் கற்பிக்கத்தக்க நிலையிலுள்ள ஊடகவியலாளர்கள் யாரை நாட்டின் தலைவராகத் தெரிவு செய்வது என்ற சரியான தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும்.
நாட்டில் ஏகாதிபத்திய இராணுவ ஆட்சியையா அல்லது சுதந்திரமான சிவில் ஜனநாயக ஆட்சியையா ஸ்தாபிப்பது என்ற முடிவை எடுக்கவேண்டிய தருணம் இதுவாகும்” என ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.