பொதுஜன பெரமுன அமோக வெற்றிப் பெற்று அதிகமான ஆசனங்களை கைப்பற்றும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் பத்திரன சவால்விடுத்துள்ளார்.
அத்தோடு ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முன்னர் தமது பலத்தை ஐக்கிய தேசியக் கட்சி இத்தேர்தலில் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு மேலும் தெரிவித்த அவர், “ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் சுதந்திரக் கட்சி ஆகியன ஒப்பந்த அடிப்படையில் இணைந்துள்ளமை எமது வெற்றியை பலப்படுத்தியுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு சுமார் 52 இலட்சம் வாக்குகள் உள்ளமை நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலின் பெறுபேற்றின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு 15 இலட்சம் வாக்குகள் காணப்படுகின்றது. ஆகவே, தற்போது இவ்விரண்டு தரப்பின் இணைப்பின் ஊடாக சுமார் 67 இலட்சம் வாக்குகள் எதிரணிக்கு உள்ளது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சுமார் 67 இலட்சம் வாக்குகளை அடிப்படையாகக் கொண்டே பொதுஜன பெரமுன ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்ளவுள்ளது.
தேர்தலில் வெற்றி பெறுவதற்கான அனைத்து திட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளன. சுதந்திரக் கட்சியின் கொள்கையினையும் ஆதாரமாகக் கொண்டு ஜனாதிபதி தேர்தலில் அமோக பெற்றி பெற முடியும்” என அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.