புறக்கணித்தால், கோட்டாபய ராஜபக்ஷ வெற்றிபெற்றுவிடுவார் எனக் கூறும் தரப்பினர், கோட்டாவுக்கும் ஏனைய வேட்பாளர்களுக்கும் உள்ள வித்தியாசத்தை வெளிப்படையாகக் கூறவேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
யாழில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதித் தேர்தலினால் தமிழ் மக்களுக்கு எவ்விதமான பயனும் இல்லை என்றும் அவர் கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்ற பிரதான வேட்பாளர்கள் தங்களின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்கள். அவர்களுடைய கருத்துக்களை பார்த்தால் பிரதானமாக மூன்று கட்சிகளின் வேட்பாளர்கள் நிலைப்பாடு பொதுவானதாகவே உள்ளது.
இலங்கை சிங்கள பௌத்த நாடு என்ற விடையமும் அதற்கு மேலதிகமாக பிரதான இரண்டு கட்சியும் இலங்கை என்ற நாடு ஒற்றையாட்சி நாடாக மட்டும் தான் இருக்கமுடியும் அந்த ஒற்றையாட்சித் தன்மையை பலப்படுத்துவது தான் தமது நோக்கம் என்று மிகத் தெளிவாகக் கூறியுள்ளார்கள்.
தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற இனப்படுகொலை யுத்தம் என்ற விடயத்தில் அவர்களைப் பொறுத்தவரையில் இந்த நாட்டை காப்பாற்றிய ஒரு விடையம்.
எனவே அதில் போரிட்ட இராணுவமும் முப்படையினரும் போர்வீரர்கள் என்றும் அப்போர் வீரர்களை எக்காரணம் கொண்டும் எந்த நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரிப்பதற்கு தயார் இல்லை என்றும் அவர்களுடைய கௌரவத்தை இன்னும் உறுதிப்படுத்துவது தான் தங்கள் நோக்கம் என்ற விடையத்தையும் மிகத் தெளிவாகக் கூறியுள்ளார்கள்.
இந்தப் பின்னணியில் தமிழ் மக்கள் எங்களைப் பொறுத்தவரையில் இரண்டு விடையங்கள் முக்கியமானவை. அதாவது அரசியல் தீர்வு. அதில் விசேடமாக ஒற்றையாட்சியை நிராகரித்து தமிழ்த்தேசம் அங்கீகரிக்கப்படுகின்ற தமிழ்த்தேசத்தின் இறைமை அடிப்படையில் ஒரு சமஷ்டித் தீர்வுதான் எங்களுக்குத் தேவையான விடையம் இவை மட்டும்தான் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் கட்டமைப்பு சார்ந்த இன அழிப்பிலிருந்து எமது மக்களை பாதுகாத்துக் கொள்ளலாம்.
அடுத்ததாக ஏற்கனவே இடம்பெற்றிருந்த இன அழிப்பு முள்ளிவாய்க்கால் இன அழிப்பில் அத்தகைய சம்வங்கள் தொடராமல் இருப்பதற்கு நாங்கள் நடந்த குற்றங்களுக்கு பொறுப்புக்கூறலை செய்தே ஆக வேண்டும்.
அவ்வாறு செய்வதே எதிர்காலத்தில் யாரும் கடந்த காலத்தைப் போன்று தமிழ் மக்களை அழிக்கலாம் என்று நினைப்பவர்களுக்கு எச்சரிக்கையாக பெறுப்புக்கூறல் நடவடிக்கைகள் மூலம் குற்றவாளிகளாக அடையாளம் கண்டு அவர்களுக்குத் தண்டனை வழங்கும் செயற்பாடு அமையும்.
இவை இரண்டும் தான் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் இன்று நடக்கும் அத்தனை நடவடிக்கைகளுக்கும் தீர்வைக் கொடுக்கும் இதில் எந்தவிதமான விட்டுக்கொடுப்புக்கும் இடமில்லை.
ஆனால் இவை எதனையும் கருத்திற்கொள்ளாது சிங்கள வேட்பாளர்கள் நேர் எதிரான செயற்பாடுகளை தங்களை வேட்பாளர்களாக அறிமுகப்படுத்திய மாநாடுகளில் தீர்மானங்களை எடுத்துள்ளார்கள்.
அதுமட்டுமன்றி எந்தவிதமான நிபந்தனைகளுக்கும் இனங்கப் போவதில்லை எனவும் எவருடனும் எந்தவிதத்திலும் ஒப்பந்தங்கள் எழுத்து மூல உடன்படிக்ககைகள் செய்யத் தயார் இல்லை என அறிவித்துள்ளனர்.
இத்தகைய நிலையில் தமிழ் மக்களுக்கு யோசிப்பதற்கு ஒன்றுமேயில்லை. நாங்கள் தமிழ் மக்களுடைய நலன்கள் என்று பார்ப்பதானால் எங்களுக்கு இந்தத் தேர்தலில் எவ்விதமான அக்கறையும் இருக்க முடியாது” எனக் கூறினார்.