21 வயதான அமேலியா பாம்பிரிட்ஜின் உடல், காணாமல் போன இடத்திலிருந்து 62 மைல் தொலைவில் தாய்லாந்து எல்லைக்கு அருகே கண்டுபிடிக்கப்பட்டதாக பிரீயா சீயனொக் (Preah Sihanouk) மாகாணத்தின் பொலிஸ் தலைவர் சுவோன் நரின் (Chuon Narin) தெரிவித்துள்ளார்.
பாம்பிரிட்ஜின் குடும்பத்தினர் அந்த நாட்டு அதிகாரிகளுடன் சேர்ந்து தேடுதலில் ஈடுபட்டபோது அண்டை மாகாணமான (Koh Kong) கோ கொங்கிலுள்ள கோ ச்லாம் (Koh Chhlam) என்ற தீவின் கடலில் அமேலியா பாம்பிரிட்ஜின் உடல் மிதப்பதைக் கண்டனர்.கண்டெடுக்கப்பட்ட உடல், தாய் எல்லையிலிருந்து துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கிருந்து பிரதான நிலப்பரப்பை அடைய இரண்டு மணி நேரம் ஆகும் என்று பொலிஸ் தலைவர் தெரிவித்துள்ளார்.
உடலைக் கண்டெடுத்தவர்களின் தகவலின்படி அவரது உடலின் அடையாளங்கள் மற்றும் பச்சை குத்தியுள்ளமை என்பவற்றின் அடிப்படையில் அது பாம்பிரிட்ஜின் உடல் தான் என்று உறுதிப்படுத்தியுள்ளனர்.
உடல் பிரதான நிலத்தை அடைந்ததும் பிரேதப் பரிசோதனை நடத்தப்படும் என்று கூறிய பொலிஸ் தலைவர் சுவோன் நரின், அமேலியா பாம்பிரிட்ஜ், நீரில் மூழ்கி இறந்ததற்கான ஆரம்ப அறிகுறிகள் காணப்பட்டன என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானியாவின் மேற்கு சசெக்ஸ் பிராந்தியம் வேர்திங்கைச் சேர்ந்த 21 வயதான மாணவி அமேலியா பாம்பிரிட்ஜ் கடைசியாக ஒக்ரோபர் 24 ஆம் திகதி அதிகாலை 3 மணிக்கு கோ ரோங் தீவில் (Koh Rong) ஒரு கடற்கரை விருந்தில் காணப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமேலியா பாம்பிரிட்ஜ் முதன் முறையாக தனியாகப் பயணம் மேற்கொண்டார் என்றும் காணாமல்போன நாளில் அவர் நெஸ்ற் பீச் கிளப் விடுதியில் (Nest Beach Club hostel) இருந்து வெளியேறியிருந்தார் என்றும் கூறப்படுகின்றது.
பொலிஸார்,கடற்படையினர், ராணுவப் படையினர் மற்றும் தன்னார்வலர்களுடன் சேர்ந்து மொத்தமாக 147 பேர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
கடற்கரையில் இருந்து அவரது கைப்பை, பணப்பையை, தொலைபேசி மற்றும் வங்கி அட்டைகளைக் கண்டெடுத்த பொலிஸார் கடற்கரை மற்றும் கடற்பகுதியை மையப்படுத்தி தமது தேடுதலை மேற்கொண்டனர்.