மன்றத்தினால் மட்டக்களப்பு கிராம மக்களுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மட்டக்களப்பு கரடியன்குளம் கிராமத்தில் லண்டன் தர்ம திருத்தொண்டர் திருமதி சிவசக்தி சிவணேசனின் நிதி அனுசரணையில் அமைக்கப்பட்ட 3 பொதுக் கிணறுகள் இன்று (வெள்ளிக்கிழமை) மக்களிடம் கையளிக்கப்பட்டன.
இந்நிலையில், தேவையுள்ள இடத்தில் அந்த மக்களைத் தேடி வந்து உதவி வழங்கப்பட்டுள்ளதால் அதனைத் தாம் மனமுவந்து வரவேற்றுப் பாராட்டுவதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தின் தன்னார்வ தொண்டர் செல்வி சிவகுணம் ஜீவமணி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வறிய மாணவர்கள் 12 பேருக்கு தலா 17 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சைக்கிள்கள், வறிய மாணவர்கள் 21 பேருக்கு தலா 500 ரூபாய் பெறுமதியான கற்றல் உபகரணங்கள், பழங்குடித் தாய்மார் 21 பேருக்கு தலா 1000 ரூபாய் பெறுமதியான சாரிகள் வழங்கப்பட்டன.
மேலும், அறநெறிப் பாடசாலையொன்றுக்கான மாதாந்த உதவு ஊக்கத் தொகை, பல்கலைக்கழக கல்வியை மேற்கொள்ளும் மாணவர்கள் 9 பேருக்கு மாதாந்த உதவு ஊக்கத் தொகையாக 5000 ரூபாயும் வழங்கப்பட்டதோடு சமீபத்தில் விபத்தில் சிக்கி கணவனை இழந்த இளம் குடும்பப் பெண்ணுக்கு வாழ்வாதாரத்துக்கான உதவு ஊக்கத் தொகையும் வழங்கி வைக்கப்பட்டது.
இந்த உதவிகளை வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தெரிவிக்கையில்,
“நீண்டகாலமாக குடிநீருக்கும் ஏனைய அத்தியாவசியத் தேவைகளுக்குமான நீர் தேவைக்கும் தட்டுப்பாட்டை எதிர்நோக்கி வந்த கரடியன்குளம் கிராம மக்களுக்கு தற்போது எக்காலத்திலும் தங்கு தடையின்றி நீர் வசதி கிடைக்கக் கூடிய வகையில் 3 பொதுக் கிணறுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது ஒரு வரப்பிரசாதமாகும்.
இதனை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி கிராம மக்கள் விவசாயத்திலும் ஏனைய வாழ்வாதாரத்திலும் முன்னேற்றமடைவதோடு இப்பிரதேசத்திலுள்ள பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்பி அவர்களது கல்வியை ஊக்கப்படுத்த வேண்டும” என்று குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் எஸ். உமாசங்கர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வைத்திய அதிகாரி எஸ்.ஜெய்கிருஷ்ணா, சமூக நலப்பணியாளர் கே. துரைராஜா உட்பட பயனாளிகளும் கிராம மக்களும் கலந்து கொண்டனர்.