ஜம்மு -காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவில் மத்திய அரசு மாற்றம் கொண்டுவந்து சிறப்புப் பிரிவை இரத்து செய்தது.
அம்மாநில சட்டப்பேரவையின் அனுமதி பெறாமல் மாநிலத்தை ஜம்மு மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது. நாடாளுமன்றத்தில் ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டத்தை நிறைவேற்றியது.
இந்த சட்டத்தை ரத்து செய்யக் கோரி தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவர் எம்.எல்.ரவி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அவரது மனுவில், “காஷ்மீரைப் போல பிற மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களாகச் சுருக்கும் அபாயம் இருக்கிறது. மாநிலங்களை அம்மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல், யூனியன் பிரதேசமாக மாற்றுவதற்கு மத்திய அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை.
மத்திய அரசின் நடவடிக்கை, கூட்டாட்சிக் கொள்கைக்கு விரோதமானது. இந்தச் சட்டத்தைத் தடை செய்யவேண்டும்” என அறிவிக்கக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த மனு விசாரணைக்கு உகந்ததுதானா? இல்லையா? என்பது குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அப்போது மனுதாரர் சார்பில், தற்போது ஜம்மு காஷ்மீரைப் பிரித்தது போல தமிழகத்தையும் பிரிக்க வாய்ப்புள்ளதாகவும், அதனால் இந்த வழக்கை விசாரிக்க உயர் நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது என்றும் வாதிடப்பட்டது.
காஷ்மீரைப் போல தமிழகத்தைப் பிரித்துவிடுவார்கள் என்ற சந்தேகங்களுக்கும் ஊகங்களுக்கும் பதிலளிக்க முடியாது. யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்க வாய்ப்புள்ளதாக எந்த மாநிலமும் அச்சம் தெரிவிக்கவில்லை.
யூனியன் பிரதேசங்களாகப் பிரிப்பதால் கூட்டாட்சிக் கொள்கைக்கு எந்த பாதிப்பும் இல்லை என தெரிவித்த நீதிபதிகள் அமர்வு, ஏற்கெனவே இது சம்பந்தமான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகச் சுட்டிக்காட்டினர்.
பின்னர் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததா? இல்லையா? என்பது குறித்த தீர்ப்பை திகதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.