தீபாவளிப் பண்டிகை நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படவுள்ளது. இப்பண்டிகையில் பட்டாசு வெடித்தல் முக்கிய நிகழ்வாக இடம்பெற்று வருகிறது.
இந்நிலையில், பட்டாசு வெடிப்பதால் தீவிபத்துக்கள் ஏதேனும் ஏற்பட்டால் உடன் தகவல் தெரிவிப்பதற்கு வசதியாக ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக தென் மண்டல அளவிலான தொடர்பு எண்ணையும் தீயணைப்புத் துறை வெளியிட்டுள்ளது.
இதன்படி தேனி (04546) 252699, விருதுநகர் (04362) 243666, சிவகங்கை (04575)240301, மதுரை (0452) 2335399, இராமநாதபுரம் (04567) 230094, தூத்துக்குடி (0461) 2326501, திருநெல்வேலி (0462) 2572099, நாகர்கோயில் (0465) 2276331 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இது குறித்து தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை இயக்குநர் செ.காந்திராஜனின் செய்தி அறிக்கையில், “தீபாவளியை முன்னிட்டு தென் மண்டலங்களில் இந்த ஆண்டு 491 பட்டாசு கடைகளுக்கு தடையின்மைச் சான்றுகள் வழங்கப்பட்டுள்ளன. அதிக மக்கள் தொகை உள்ள இடங்களில் விழிப்புணர்வுப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறன.
தென் மண்டலத்தைப் பொறுத்தவரை தீபாவளியின் போது ஏற்படுகின்ற விபத்துக்களை எதிர்கொள்ள தீயணைப்பு வண்டிகள் மற்றும் செயற்கருவிகளோடு நிலைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளன.
இதன்படி, மதுரையில் விளக்குத்தூண், தேர்முட்டி (கீழமாசிவீதி), மின்வாரிய அலுவலகம் அருகில், சிம்மக்கல், ஓபுளா படித்துறை, டி.எம்.கோர்ட் போன்றவற்றிலும், தேனியில் பங்களாமேடு, விருதுநகர்-ஆர்.ஆர்.நகர், அரசுப் பொருட்காட்சி(சிவகாசி), தாயில்பட்டி, ஏழாயிரம் பண்ணை, அய்யனார் கலைக்கல்லூரி பகுதிகயிலும் தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
அத்துடன், திருநெல்வேலி-வண்ணாரப்பேட்டை, பாளையங்கோட்டை சந்தை, புதிய பேருந்து நிலையம், திருநெல்வேலி நகரம், அம்பா சமுத்திரம் பேருந்து நிலையம் அருகில், நாங்குனேரி பள்ளிக்கூடம் அருகில், தென்காசி விசுவநாதர் கோயில், திருச்செந்தூர் பிரிவு சாலையிலும் தூத்துக்குடி-தெற்கு காவல் நிலையம், பெர்னாண்டஸ் சிலை ஆகிய இடங்களிலும் தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
இதேவேளை, மருத்துவமனை, வழிபாட்டுத் தலங்கள், எரிபொருள் நிரப்பு நிலையங்கள், எரிவாயு களஞ்சியம் மற்றும் குடிசைப் பகுதிகளில் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
விபத்துக்கள் இல்லாத, பாதுகாப்பான தீபாவளியை கொண்டாட பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.