தமிழ் தேசிய நாளிதழுக்கு வழங்கிய நேர்காணலியேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் துரோகமிழைத்து விட்டதாக கூறுகின்றீர்கள், ஆனால் பொதுஜன பெரமுன தமிழ் மக்களுக்கு துரோகமிழைக்காது என எவ்வாறு கூறமுடியும் என அங்கஜன் இராமநாதனிடம் கேட்டப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர், “நிபந்தனைகளை விதித்துத்தான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று 16 நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்திருந்தும் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திடம் தமிழ் மக்களுடைய தேவைகளை பூர்த்திசெய்ய முடியாதுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானங்கள் வரும்போதும் வரவு-செலவுத்திட்ட வாக்கெடுப்பு வரும் போதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளித்துள்ளது.
ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒரு ஒப்பந்த ரீதியாக பொதுஜன பெரமுனவை ஆதரிக்க முன்வந்துள்ளது. அந்தவகையில் எதிர்வரும் அரசாங்கத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் முக்கிய பங்களிப்பை வழங்கப்போகின்றார்கள்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 20 நாடாளுமன்ற ஆசனங்களுடன் சென்றே நிபந்தனைகளை விதித்துள்ளது. தமிழ், முஸ்லிம்களை உள்ளடக்கிய சிறுபான்மை மக்களின் பிரச்சினையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இன்று மிகப்பெரிய கோரிக்கையை முன்வைத்துத்தான் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரித்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.