நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் வெற்றி பெற்றுள்ள நிலையில், நாங்குநேரி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் முன்னிலையில் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதனால் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இன்று காலை முதலே தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், கட்சி தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய முதல்வர், ‘இந்த இடைத்தேர்தல் வரலாற்று சிறப்பு மிக்க இடைத்தேர்தல். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. அளித்த பொய்யான வாக்குறுதியை நம்பி மக்கள் அவர்களுக்கு வாக்களித்தார்கள்.
இப்போது உண்மை தெரிந்த காரணத்தால் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மக்கள் அ.தி.மு.க.வுக்கு அமோகமான வெற்றியை அளித்துள்ளார்கள். இது உண்மைக்கு கிடைத்த வெற்றி.
தர்மம், நீதி, உண்மை எப்போதும் வெல்லும் என்பதை இந்த இடைத்தேர்தல் காட்டுகிறது. திமுக பொய்யை நம்பியதால் இரண்டு தொகுதிகளையும் இழந்துள்ளது.
இந்த வெற்றிக்காக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கடுமையாக உழைத்துள்ளார்கள். அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.’ என்றார்.