இந்த சந்திப்பு முல்லைத்தீவு, கோவில் குடியிருப்புப் பகுதியில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்றது.
இச்சந்திப்பில் தற்போது தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக தமிழர் மரபுரிமைப் பேரவையினர், அவுஸ்ரேலிய பிரதமரின் நேரடிப் பிரதிநிதி தலைமையிலான குழுவினருக்கு விளக்கமளிக்கப்பட்டது.
மேலும், தமிழர் மீதான கட்டமைக்கப்பட்ட இனவழிப்பிற்கு அவுஸ்ரேலியா போன்ற உலக நாடுகள் ஒத்துழைப்பு வழங்கக் கூடாதெனவும் பேரவையினர் அவர்களிடம் வலியுறுத்தியுள்ளனர்.
இச்சந்திப்பில் அவுஸ்ரேலியப் பிரதமரின் நேரடிப் பிரதிநிதிகளுடன், இலங்கையில் இருக்கக்கூடிய அவுஸ்ரேலிய தூதுவராலயத்தின் அரசியல் விவகாரங்களுக்கான முதன்மைச் செயலாளர் சுசானா ஜோன்சன், மற்றும் தமிழர் மரபுரிமைப் பேரவையின் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.
இச்சந்திப்பு தொடர்பாக தமிழர் மரபுரிமைப் பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவரான விஜயகுமார் நவநீதன் கருத்துத் தெரிவிக்கையில்,
“இன்று இடம்பெற்ற சந்திப்பில் இலங்கையில் இருக்கக்கூடிய அவுஸ்ரேலிய அரசாங்கத்தின் தூதுவராலயத்தினுடைய சந்திப்பு என்பதற்கு அப்பால் அவுஸ்ரேலியாவிலிருந்து நேரடியாக, அவுஸ்ரேலிய பிரதமருடைய பிரதிநிதிகளாக இருவர் கலந்துகொண்டிருந்தனர்.
குறிப்பாக இச்சந்திப்பில் போரின் பின்னரான பத்தாண்டுகளிலே இந்தப் பிரதேசத்திலே இடம்பெற்றிருக்கக்கூடிய மாற்றங்கள், முன்னேற்றங்கள் மற்றும் சவால்கள் தொடர்பாக ஆராய்வதற்கான கலந்துரையாடலாக இது அமைந்தது.
இதில் மிகவும் முக்கியமாக, அவுஸ்ரேலிய பிரதமருக்கு அறிக்கையிடப்படும் என்ற அடிப்படையிலே, நாங்கள் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தெளிவாக விளங்கப்படுத்தினோம்.
போர் முடிவுற்று பத்து ஆண்டுகள் கடந்துசெல்லும் நிலையில், இங்கே இடம்பெற்றிருக்கக் கூடிய மனித உரிமை மீறல்கள் அல்லது நீதிக்குப் புறம்பான செயற்பாடுகள், பொறுப்புக்கூறலில் ஏற்பட்டிருக்கக் கூடிய மந்த நிலைகள் மற்றும் அபிவிருத்தி என்னும் போர்வையிலே எமது மக்கள் மீது திணிக்கப்பட்டிருக்கின்ற சுமைகள் என்ற அடிப்படையிலே பல்வேறுபட்ட விடயங்களை மிகவும் ஆதாரபூர்வமாகவும், காத்திரமான முறையிலும் தெரியப்படுத்தியிருக்கின்றோம்.
குறிப்பாக இங்கு இடம்பெறுகின்ற கட்டமைக்கப்பட்ட இனவழிப்புகளுக்கு, அவுஸ்ரேலியா போன்ற உலக நாடுகள் ஒத்துழைப்பு வழங்கக்கூடாது என மிகவும் ஆணித்தரமாகக் கூறியிருக்கின்றோம். அந்த விடயத்திலே கூடுதல் கவனம் எடுப்பார்கள் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது” என்றார்.