முன்னெடுக்கவிருக்கும் பயணம் என்பது நாட்டின் தேசிய நலனை மையப்படுத்தியதே அமையும் என ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
சிவில் சமூக மற்றும் தொழிற்சங்கங்களின் ஒன்றியம் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் தமது ஆதரவை ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேதமாசவிற்கு வழங்கி, அவரை வெற்றிபெறச்செய்வதற்கு தீர்மானித்துள்ளது.
இந்நிலையில் தமது ஆதரவை வெளிப்படுத்துவதுடன், அவரால் நிறைவேற்றப்பட வேண்டிய யோசனைகளைக் கையளிக்கும் நோக்கிலான நிகழ்வொன்று இன்று (புதன்கிழமை) கொழும்பிலுள்ள புதிய நகர மண்டபத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், எதிர்காலத்தில் முன்னெடுக்கவிருக்கும் பயணம் ஒருபோதும் தனியொரு குடும்பத்தினதோ அல்லது தனிநபர்கள் சிலரினதோ நலனை முன்னிறுத்தி இடம்பெறாது என கூறினார்.
கடந்த 2015 ஆம் ஆண்டில் ஏகாதிபத்தியத்திலிருந்து மீண்டு நாம் வெற்றிகண்ட சுதந்திரத்தை, இம்முறை தாரைவார்த்துக் கொடுத்துவிடக்கூடாது என்றும் ஜனநாயகத்தை வலுப்படுத்தி முன்னோக்கி பயணிப்பதா அல்லது ஏகாதிபத்தியவாதிகளிடம் ஆட்சியை ஒப்படைப்பதா என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும் எனவும் கூறினார்.