தலைவராக இருக்க வேண்டுமா அல்லது ஒரு கொலையாளியாக இருக்க வேண்டுமா என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கேள்வி எழுப்பினார்.
புதிய ஜனநாயக முன்னணியின் முதலாவது ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டம் காலி முகத்திடலில் இன்று பிற்பகல் நடைபெற்றது. ‘ஒன்றாக முன்னோக்கி செல்வோம்’ என்ற தொனிப்பொருளில் பிரசாரக்கூட்டம் நடைபெற்றது.
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு இதன்போது அமோக வரவேற்பளிக்கப்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.
இந்த பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் “நாட்டு மக்களுக்கு தேவை மக்களை காக்கும் தலைவனா அல்லது மக்களை கொலை செய்யும் தலைவனா. மக்களை காக்கும் தலைவன் வேண்டுமானால் சஜித் பிரேமதாசவுக்கு வாக்களித்து அவரை நாட்டில் ஜனாதிபதி ஆக்கவேண்டும். அவ்வாறு இல்லாமல் நாட்டுமக்களை கொலை செய்யும் தலைவனை மக்கள் எதிர்பார்ப்பார்களாயின் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களியுங்கள்.
சஜித் பிரேமதாசவை நாங்கள் ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்த பின்னர் எமது எதிரணியினர் காலம்சென்ற எமது ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவுக்கு எதிராக தாக்குதல் தொடுக்க ஆரம்பித்துள்ளனர்.
அன்று அவருடன் ஒன்றாக வேலை செய்த அமைச்சர் என்ற வகையில் நான் இது குறித்து தெளிவுபடுத்த வேண்டும். ரணசிங்க பிரேமதாச காரணமாகவே ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன தேர்தலில் ஐந்தில் ஒரு பெரும்பான்மை பலத்தில் வெற்றிபெற்றார்.
ரணசிங்க பிரேமதாசவே குடும்பவாதம், ஏற்றத்தாழ்வுகளை இல்லாதொழித்து நாட்டை நல்ல நிலைமைக்கு கொண்டு கொண்டு நடவடிக்கை எடுத்தார். நான் ரணசிங்க பிரேமதாசவின் அரசாங்கத்தில் கைத்தொழில் அமைச்சராக பணியாற்றினேன்.
அவர் தெளிவான நோக்கத்துடனேயே நாடு முழுவதும் 200 ஆடைத் தொழிற்சாலைகளை திறக்க காரணமாக இருந்தார். அவர் செய்த வேலைகளையே சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்னர் நாங்கள் முன்னெடுக்க உள்ளோம்.
ஹம்பாந்தோட்டையில் 10 ஆயிரம் ஏக்கரில் தொழிற்பேட்டை தேவையில்லையா என்று மஹிந்த மற்றும் கோட்டாபய ஆகியோரிடம் கேட்கின்றேன். காலிமுகத்திடல் மைதானத்தை மேலும் 40 மீற்றர்கள் கடல் பக்கம் விரிவுப்படுத்த எண்ணியுள்ளோம். இதேபோன்று பாரிய மாற்றங்களை ஏற்படுத்த எண்ணியுள்ளோம்.
சஜித் பிரேமதாச அரசியலுக்கு வந்த போது, ஏன் மத்திய கொழும்பை தெரிவு செய்யவில்லை என்று கேட்டேன். அப்போது தனக்கு ஹம்பந்தோட்டை தருமாறு கேட்டார். வறிய மக்களோடு இருக்க வேண்டும் என அவர் என்னிடம் கூறினார்.
அன்றில் இருந்து வறிய மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து, குடும்பவாதத்தில் இருந்து மக்களை மீட்டெடுத்து, மக்கள் மத்தியில் இருந்து சஜித் பிரேமதாச தலைவராக உருவாகியுள்ளார்” எனவும் பிரதமர் தெரிவித்தார்