நிலையத்தின் பெயர் பலகைகளில் தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளமை தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச விமர்சனம் வெளியிட்டுள்ளார்.
தேர்தல் பிரச்சார மேடையொன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) உரையாற்றியபோதே விமல் வீரவன்ச இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “அரச மொழிக் கொள்கைக்கு அமைய, சிங்கள மொழியே பெயர் பலகைகளில் முதலில் இருக்க வேண்டும்.
ஆனால் இதற்கு மாறாக, யாழ். சர்வதேச விமான நிலையத்தில் முதலில் தமிழ் மொழியும் இரண்டாவதாக சிங்கள மொழியும் மூன்றாவதாக ஆங்கில மொழியும் இருப்பதாக பெயர்ப்பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது மொழிக் கொள்கைகள் இல்லாது போயுள்ளன” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் ஐந்தாவது சர்வதேச விமான நிலையமான யாழ். சர்வதேச விமான நிலையம் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்து உட்பட்ட பலரின் பிரசன்னத்துடன் திறந்து வைக்கப்பட்டது.
யாழின் கலாசார மற்றும் மொழித் தொன்மைகளை அடிப்படையாகக் கொண்டு குறித்த விமான நிலையத்தின் பெயர்ப் பலகைகளில் தமிழுக்கு முன்னரிமை வழங்கப்பட்டிருக்கும் நிலையில், விமல் வீரவன்சவால் குறித்த விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளித்து வருகிறது.
இந்த சூழலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் யாழ். மாவட்ட தேர்தல் காரியாலயத்தில் பெயர்ப் பலகையில் தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.