இனவாதத்தை முன்னிறுத்தி அதனூடாக ஆட்சிபீடம் ஏறுவதற்கு ராஜபக்ஷவினர் முனைகின்றனர் என அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சுஜீவ சேனசிங்க மேலும் கூறியுள்ளதாவது, “பெரும்பாலான நாடுகளில் இனவாதத்தை முன்னிருத்தி ஆட்சி கைப்பற்றிய வரலாறு காணப்படுகின்றது.
அதாவது, சிரியாவில் அசாட், சதாம் உசைன், லிபியாவில் கடாபி, முகாபே, இட்லர் ஆகியோர் இனவாதத்தின் ஊடாகவே ஆட்சி செய்தனர். அதேபோன்றதொரு செயற்பாட்டினையே ராஜபக்ஷவினரும் தற்போது முன்னெடுத்துள்ளனர்.
மேலும் தொடர் குண்டுத் தாக்குதலுக்கு காரணமான சஹ்ரானை காரணம் காட்டி ஆட்சியை கைப்பற்றுவதற்கு ராஜபக்ஷ முயன்றுள்ளனர்.
சஹ்ரான் என்ற பயங்கரவாதியை கோட்டாபய தற்போது வணங்குவாரென நான் நினைக்கின்றேன்.
மேலும் கோட்டாபய ஆதரவு தெரிவிக்கும் டிலான், கம்மன்பில ஆகியோர் இதற்கு முன்னர் அவரை மிகவும் தவறாக குறிப்பிட்டனர்.
நான் கூறுவது பொய்யென்றால், இந்த காணொளியைின் ஊடாக மக்கள் புரிந்துகொள்ள முடியும்.
அதாவது டிலான், “கோட்டாபயவினால்தான் இதற்கு முற்பட்ட தேர்தலில் மஹிந்த தோல்வியை சந்தித்ததாக குறிப்பிட்டார்.
அதேபோன்று கம்மன்பில பஷில் ராஜபக்ஷ நல்லவர் என்பதை வெளிப்படுத்துவதற்காக, “பிரதேச சபையில் கூட அங்கம் வகிக்காத ஒருவருக்கு நாட்டை வழிநடத்துவதற்கு கொடுப்பது ஏற்புடைய விடயம் அல்லவென கோட்டாபய குறித்து கூறியிருந்தார்.
இவ்வாறெல்லாம் கூறிவிட்டு இன்று அவருக்கு ஆதரவு வழங்குவதற்காக வேறுவிதமாக பேசுகின்றார்கள். இவர்கள் மக்களை ஏமாற்ற முனைகின்றார்கள்.
இராணுவ வீரர்கள் குறித்து பேசும் ராஜபக்ஷக்கள் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த சரத்பொன்சேகாவை சிறையில் வைத்ததை மக்கள் மறக்க கூடும்.
சரத்பொன்சாகாவை ஏன் சிறையில் அடைத்தார்கள் என்பதற்கான காரணம் உண்மையாக எனக்கு தெரியாது.
சரத் பொன்சேகா போன்ற சிறந்த வீரர் உண்மையாக இல்லை. கோட்டாபயதான் அவரை சிறையில் அடைப்பதற்கு காரணமாக இருந்திருக்க வேண்டும்.
அதுமாத்திரமின்றி ஊடகவியலாளர் லசந்த விக்ரமசிங்க கொலை, கடத்தல் உள்ளிட்ட பல்வேறு நாச காரியங்களை புரிந்தவருக்கு மக்கள் ஆதரவு வழங்கப்போகின்றீர்களா?
எனவே இவ்விடயங்களை எல்லாம் கவனத்திற்கொண்டு உரிய முடிவை மக்கள் எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.