இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் தொடர்பாக கொள்கலனை ஏற்றிவந்த லொறியின் சாரதி மோ ரொபின்சனைக் (வயது 25) கைதுசெய்த பொலிஸார் தீவிர விசாரணைகளை நடத்திவருகின்றனர்.
மேலும் கைது செய்யப்பட்ட சாரதி மோ ரொபின்சன் வடக்கு அயர்லாந்தின் போட்டவுணைச் சேர்ந்தவர் என்று கருதப்படுகின்றது.
குளிரூட்டப்பட்ட கொள்கலனில் இறந்து காணப்பட்ட 39 பேரும் சீனப் பிரஜைகள் என்று கூறப்படுகின்றது.
நேற்று அதிகாலை 1:05 க்கு பேர்பிலீற் (Purfleet) துறைமுகத்திலிருந்து கொள்கலனைத் தாங்கிய லொறி வெளியேறியது. பின்னர் அங்கிருந்து கிரேஸில் உள்ள வோட்டர்கிளேட் தொழிற்சாலைப்பகுதிக்குச் சென்றவேளையில் லொறி பொலிஸாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டது.
அதிகாலை 1:30 க்கு அங்கு வரவழைக்கப்பட்ட அம்புலன்ஸ் பிரிவினர் குளிரூட்டப்பட்ட அந்தக் கொள்கலனைத் திறந்துபார்த்தபோது அதிலிருந்து 39 பேரின் சடலங்களைக் கண்டுபிடித்தனர்.
39 பேரின் சடலங்களைக் கொண்டிருந்த கொள்கலன் பெல்ஜியத்தின் சீபுரூக்காவிலிருந்து (Zeebrugge) கப்பல் மூலம் தேம்ஸ் நதியை ஊடறுத்து பேர்பிலீற் (Purfleet) துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
பல்கேரியாவின் வர்ணாவில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த லொறி கொள்கலன் இல்லாமல் டப்ளினிலிருந்து வேல்ஸுக்கு ஒரு கப்பலில் ஏற்றிக் கொண்டுவரப்பட்டதாக நம்பப்படுகிறது.
குறித்த லொறி ஒக்ரோபர் 19 ஆம் திகதி வேல்ஸின் ஹொலிஹெட் துறைமுகப் பகுதியில் இருந்து எசெக்ஸ் சென்றுள்ளது. எனினும் கொள்கலனை ஏற்றுவதற்கு நான்கு நாட்களுக்கு முன்னர் லொறி ஏன் எசெக்ஸுக்கு கொண்டுவரப்பட்டது என்பதுபற்றி தெளிவாகத் தெரியவில்லை.
இதேவேளை பெல்ஜியத்தின் சீபுரூக்கா துறைமுகப் பகுதியிலிருந்து சட்டவிரோதக் குடியேற்ற நடவடிக்கைள் நடைபெறுவதாக ஏற்கனவே பலதடவைகள் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.