தூத்துக்குடியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அமைச்சர் கடம்பூர் ராஜூ ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில், “கடந்த தேர்தலில் தி.மு.க. 10 கட்சிகளுடன் கூட்டணி வைத்து தான் 90 இடங்களைப் பிடித்தது.
ஆனால் அ.தி.மு.க. யாருடைய ஒத்துழைப்பும், கூட்டணியும் இல்லாமல் போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. முதலமைச்சர் பதவி ஒன்று தான் இலட்சியம் என்ற கனவோடு மு.க.ஸ்டாலின் இருக்கிறார்.
பா.ஜனதா எங்கள் கூட்டணி கட்சி. அ.தி.மு.க. ஆட்சியில் அவர்களின் பங்களிப்பு இல்லை என்பது மக்களுக்கு தெரியும். ஆனால் இது மு.க.ஸ்டாலினுக்கு தெரியவில்லை. இது தெரியவில்லை என்று சொன்னால் அவர் எதிர்க்கட்சி தலைவராக இருக்கவே தகுதியில்லை என்று அர்த்தம்.
நாடாளுமன்ற தேர்தலில் மக்களின் தீர்ப்பு வேறாக அமைந்தாலும், சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அரசு தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் மக்கள் வாக்களித்துள்ளனர். அதனை மு.க.ஸ்டாலினால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் மீண்டும் நடக்கக் கூடாது என்று மு.க.ஸ்டாலின் நினைக்கிறார். ஆனால் உள்ளாட்சி தேர்தல் வரும். அதில் 100 சதவீதம் நாங்கள் வெற்றி பெறுவோம்” என்று கூறினார்.