தந்திரக்காரனின் இறுதி ஆயுதங்களாக மதவாதமும் இனவாதமுமே முன்னிலைப்படுத்தப்படுவதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இவ்வாறு இருக்கையில் இனவெறியும், மதவெறியும் தோல்வியுற்ற அரசியலின் ஒரு உடமையாக மாறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கண்டி புஸ்பதான மண்டபத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற பௌத்த சம்மேளன கூட்டம் ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை வௌியிட்டார்.
அவர் தெரிவிக்கையில், “ஒரு சிலர் தற்போது நாட்டின் மீது பெரும் பற்றுடனும், மதத்தின் மீது மிகுந்த கரிசனையுடனும் செயற்படுவதாக அரசியல் மேடைகளில் நாடகம் நடத்துவதற்கு ஆரம்பித்து விட்டனர்.
சிங்கள பௌத்த இனத்தவருக்கு பாரிய அழிவு ஏற்படப் போகின்றது. சிங்கள மக்களின் எண்ணிக்கை குறைந்து மற்றைய இன மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளது. அது சிங்கள இன மக்களுக்கு பாரிய அபாயகரமான நிலைமையாக மாறியிருக்கின்றது. இது எமது மனசாட்சியை தூண்டுகின்றது.
சிங்கள மக்களின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதில் எந்த பயனும் இல்லை. சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் ஸ்தாபித்தோம் என்றும் பெருமைப்பட முடியாது. செழிப்பான அரசாட்சி போன்று நிர்வாகத்தை ஏற்படுத்திவிட்டால் போதும் என்றும் இருக்க முடியாது.
எனவே தோல்வியுற்ற ஒரு அரச நிர்வாகி இனவாதத்தை எமது மனதில் விதைக்கிறார். இதற்குத்தான் சிங்களத்தில் ஒரு வசனம் இருக்கின்றது. தந்திரக்காரனின் இறுதி ஆயுதங்கள் மதவாதம், மற்றும் இனவாதம் என்பதாகும். அரசியல் போர்க்களத்தில் இவ்வாறான விடயங்கள்தான் இடம்பெறுகின்றன.
முஸ்லிம் தலைவர்கள் சென்று அவர்களின் மக்களிடம் மனக் குரோதத்தை தூண்டுகிறார்கள். தமிழ் அரசியல் தலைவர்கள் தமிழ் மக்களிடம் சென்று அவர்களின் மனங்களில் குரோதத்தை தோற்றுவிக்கின்றனர். சில சிங்கள தலைவர்கள் எமது மக்களிடம் சென்று இனவாதத்தையும், மதவாதத்தையும் விதைக்கின்றனர். அது அரசியல் போராட்டமாக வெடிக்கின்றது.
இன்று கற்சிலைகள் மறைக்கப்பட்டு வேறு வகையான சிலைகள் வெளியில் தென்படுகின்றன. பல அரசியல்வாதிகள் நமது வரலாற்று பாரம்பரியங்களை தங்கள் அரசியல் மேடைகளில் பேசு பொருளாக மாற்றியுள்ளனர். அதனை மையப்படுத்தி சகல செயற்பாடுகளும் அமைவதால் நாட்டை முன்னோக்கி நகர்த்த முடியவில்லை.
இதனால் மதத்தையும், இனத்தையும் சார்ந்து எமது அரசியல் நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்க மாட்டோம் என்பதை தேரர்கள் முன்னாள் உறுதியாக கூறிக்கொள்கின்றேன்” என்று குறிப்பிட்டார்