நடிகர் விஜய் நடிப்பில் உருவாகிய ‘பிகில்’ படம் தீபாவளியை முன்னிட்டு இன்று (வெள்ளிக்கிழமை) வெளியானது.
இந்நிலையில் தமிழக முழுவதும் சிறப்பு காட்சி வெளியிட முதலில் தமிழக அரசு அனுமதி கொடுக்கவில்லை. பின்னர் நேற்று இரவு 10 மணியளவில் பிகில் படத்திற்கான சிறப்பு காட்சி வெளியிட தமிழக அரசு அனுமதி வழங்கியது.
கிருஷ்ணகிரியில் உள்ள திரையரங்குகளில் பிகில் படத்திற்கான சிறப்பு காட்சி வெளியிட அறிவிப்பு வெளியானது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள விஜய் ரசிகர்கள் ஏராளமானோர் நள்ளிரவு கிருஷ்ணகிரி அருகே உள்ள திரையரங்கு முன்பு குவிந்தனர்.
எனினும் அதிகாலை 3 மணியளவில் பிகில் படத்திற்கான சிறப்பு காட்சி வெளியிட தாமதமானது. இதனால் கோபமடைந்த விஜய் ரசிகர்கள் கண்காணிப்பு மேடை, ஒலிப்பெருக்கிகள் மற்றும் சி.சி.டி.வி. கமராக்கள் ஆகியவற்றை அடித்து நொறுக்கியதுடன் தீவைத்து எரித்து அட்டகாசத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதி முழுவதும் கலவர பூமியாக மாறியது.
விஜய் ரசிகர்கள் அதிகளவில் குவிந்திருந்தால் பொலிஸாரால், அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் போனது.
இதைத்தொடர்ந்து உடனடியாக அதிவிரைவு பொலிஸ் படையினர் அங்கு விரைந்து வந்து விஜய் ரசிகர்கள் மீது தடியடி நடத்தி அவர்களை விரட்டியடித்தனர்.
மேலும் வேறு ஏதாவது அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க ஏராளமான பொலிஸார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும் இந்த கலவரத்திற்கு காரணமானவர்கள் யார் என்பதை சி.சி.டி.வி கமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்திய பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை விஜய் ரசிகர்கள் 30 பேரை கைது செய்து விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.