தேசிய கொள்கை ஒன்றை செயற்படுத்தவுள்ளதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்த கொள்கை செயற்பாடு மூலம் விவசாயிகளை பாதுகாத்துக் கொள்ளத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
கொழும்பில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற விவசாய ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி உதவி அதிகாரிகளின் தேசிய சம்மேளனத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் கூறுகையில், “நாம் முதலில் விவசாயத்துறைக்காக தேசிய கொள்கை ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளோம். அதனூடாக விவசாயிகளை பாதுகாத்துக் கொள்ளத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். நமது விவசாயத்தை சார்ந்தே நமது பொருளாதாரம் காணப்படுகிறது.
அதன் காரணமாக விவசாயத்தை கைவிட முடியாது. உலகம் முழுவதும் உணவுப் பாதுகாப்பு முக்கிய இடத்தை பெற்றுள்ளது. இதனால்தான் ஒரு நாடு விவசாயத்தில் தன்னிறைவு பெற வேண்டும். நாம் மற்ற நாடுகளைச் சார்ந்து இருக்க வேண்டியதில்லை.
நம்முடைய சொந்த உணவில் நாம் தன்னிறைவு பெற வேண்டும். விவசாயிகள் எவ்வாறான கஷ்டங்களை எதிர்கொள்கிறார்கள் என்பதைக் கண்டதால் அடுத்த தலைமுறை விவசாயிகள் விவசாயத்திலிருந்து விலகிச் செல்கிறார்கள்.
விவசாய குடும்பங்களின் வருமானத்தை உயர்த்துவது மிகவும் முக்கியமானது. விவசாயத்தில் நவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம், உங்கள் தொழிலுக்கு அதிக மதிப்பை சேர்ப்பதன் மூலம் அதிக வருமானத்தை பெற்றுக் கொடுக்கும் வாய்ப்பு உள்ளது” என்று தெரிவித்தார்.