ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு பிரதமருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி செப்டம்பர் 12 ஆம் திகதி இலங்கை நேரப்படி காலை 09:30 மணிக்கு ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு ரணில் விகாரமசிங்கவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
விவசாய அமைச்சின் கட்டிடம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் அழைக்கப்பட்டுள்ளார்.
17 நாடாளுமன்ற துறை மேற்பார்வைக் குழுக்களின் நடவடிக்கைகளுக்கு இந்த கட்டிடத்தைப் பயன்படுத்த அமைச்சரவை பத்திரத்தை பிரதமர் முன்வைத்த பின்னர் கடந்த 2015 ஆம் ஆண்டு குறித்த கட்டடத்தில் இருந்து அமைச்சு வெளியேறியிருந்தது.
இதன் விளைவாக அமைச்சு பின்னர் 21.5 மில்லியன் ரூபாய் வாடகை செலுத்தி புதிய கட்டிடத்தை வாங்கியது. குறித்த கட்டிடம் குத்தகைக்கு பெறப்பட்டபோது ஊழல் இடம்பெற்றதாக பலவேறுகுற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.
இந்த விவகாரம் தொடர்பாக இதற்கு முன்னர் பிரதமரின் செயலாளர் சமன் ஏகநாயக்க ஊழல், மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.