கையிலெடுப்பது நாட்டிற்கு அழிவையே ஏற்படுத்தும் என இந்து மாமன்றம் தெரிவித்துள்ளது.
அத்துடன் நாட்டில் மக்களை பாதிக்கக்கூடிய இப்படியான செயல்களை தடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால் நல்லிணக்கம் ஏற்பட வாய்ப்பே இல்லாமல் போகும் என்று வவுனியா இந்து மாமன்றம் குறிப்பிட்டுள்ளது.
செம்மலை விவகாரம் தொடர்பாக இந்து மாமன்றத்தினால் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில், “செம்மலை நீராவியடி விநாயகர் ஆலய வளாகத்தில் பௌத்த விகாரை அமைத்து தங்கியிருந்த நிலையில் புற்றுநோயால் மரணமடைந்த, மேதாலங்க தேரரின் உடலை நீதிமன்றின் கட்டளையையும் மீறி இந்து தர்ம நெறிமுறைகளிற்கு அப்பால் ஆலய வளாகத்தில் தகனம் செய்யப்பட்டது.
அத்துடன் இனந்தெரியாத காடையர்கள் மூலம் சட்டத் தரணிகளையும், பொதுமக்களையும் தாக்கிய சம்மவத்தினை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.
இலங்கையில் சட்டம், நீதி, நெறிமுறைகள் அனைத்தும் சகல இன மக்களிற்கும் பொதுவானது. சட்டத்தின் முன் அனைவரும் சமம். இந்நிலையில் இந்து மக்களின் பூர்விக வழிபாட்டுத் தலம் அமைந்துள்ள வளாகத்தில் இப்பாதகமான செயல் இடம்பெற்ற நிலையில், இதற்கு காரணமானவர்கள் மீது இலங்கை அரசாங்கம் இதுவரை காத்திரமான நடவடிக்கைகள் எவையும் எடுக்கத் தவறியதையிட்டு நாம் கவலையடைகின்றோம்.
வன்முறைகளின் மூலம் எதனையும் சாதித்துவிட முடியாது. இச்செயல்கள் அழிவையே தரும். இது எமக்கு காலம் தந்த பாடம். அன்பே சிவம் அன்பினால் மாத்திரமே எதனையும் சாதிக்க முடியும். இதையே இந்து, பௌத்த தர்மங்களும் கூறுகின்றன. இந்நிலையில் பௌத்த துறவியான ஞானசார தேரர் தர்மத்திற்கு மாறாக வன்முறையை கையிலெடுப்பது எமது நாட்டிற்கு உகந்ததல்ல.
பலதரப்பட்ட இன மதங்களைப் பின்பற்றும் நாட்டில் மக்களை பாதிக்கக்கூடிய இப்படியான செயல்களைத் தடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்காது போனால் இனவாத, மதவாத கருத்துக்கள் மக்கள் மத்தியில் மேலோங்கி நாடு அழிவுப் பாதையை நோக்கியே நகரும். இதனால் மக்கள் மத்தியில் நல்லிணக்கம் ஏற்பட வாய்ப்பே இல்லாமல் போய்விடும்.
சட்டத்தையும் ஒழுங்கையும் நடைமுறைப்படுத்தக் கூடிய மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள், தங்கள் கடமைகளை சரிவர செய்யத் தவறும் பட்சத்தில் இப்படியான சம்பவங்கள் அதிகரித்து சட்டத்தின் ஆட்சி நிலைகுலைந்து, நீதி நிர்வாகங்கள் அனைத்தும் நெறிமுறையில்லாமல் சீரழிந்து மக்கள் வாழ முடியாத நிலையே ஏற்படும்.
எனவே இச்சம்பவம் தொடர்பாக நீதியான விசாரணை மேற்கொண்டு குற்றம் செய்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி நடவடிக்கையினை எடுக்கவேண்டும் என இந்து மக்கள் சார்பாக எதிர்பார்த்து நிற்கின்றோம்” என்று குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.