ஐம்பதாயிரம் சிறுவர்களைப் பராமரிப்பதற்கான வசதியை ஏற்படுத்தவுள்ளதாக சமஷ்டி லிபரல் கட்சி அறிவித்துள்ளது.
பள்ளிக்கூடம் ஆரம்பமாவதற்கு முன்பாகவும், முடிவடைந்த பின்னரும் சிறுவர்களைப் பராமரிக்கும் விதமாக இந்த வசதியை ஏற்படுத்தவுள்ளதாக சமஷ்டி லிபரல் கட்சியின் தலைவரான பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
வோட்டர்லூவில் நடைபெற்ற பிரசாரத்தின் போது இது குறித்த அறிவிப்பை ட்ரூடோ வெளியிட்டார். இதற்கு வருடமொன்றுக்கு 535 மில்லியன் டொலர் செலவாகும்.
வரும் ஒக்டோபர் 21 ஆம் திகதி, 43 ஆவது பொதுத் தேர்தல் நடைபெறள்ளது. இந்நிலையில் கடந்த 11ஆம் திகதி முதல் தேர்தல் பிரசாரங்கள் ஆரம்பமாகியுள்ளன.
இதன்படி லிபரல் கட்சி தலைவரான ஜஸ்டின் ட்ரூடோவுக்கும் கன்சர்வேடிவ் கட்சித் தலைவரான அன்ட்ரூவ் ஷீர் இற்கும் இடையில் கடும் போட்டி நிலவுகின்ற நிலையில் தேர்தல் பிரசாரங்களும் சூடுபிடித்துள்ளன.
இதேவேளை, தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளின்படி ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.