வேட்பாளர் கோட்டாபயவை கைது செய்வதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
கொழும்பில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
விமல் வீரவன்ச மேலும் கூறியுள்ளதாவது, “எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றியடைவதனை நோக்காகக் கொண்டு தேர்தல் நடவடிக்கைகளை நாம் நாடளாவிய ரீதியில் முன்னெடுத்து வருகின்றோம்.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராக பலமான அரசாங்கம் மிக விரைவில் மலரும். அத்துடன் மக்களும் எமக்கே ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போதைய அரசாங்கம் தேர்தலுக்குப் பயந்து அதனை பிற்போடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது.
மேலும் ஜனாதிபதித் தேர்தலுக்கு வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கு முன்னரே கோட்டாவை கைது செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது” என குறிப்பிட்டுள்ளார்.