நாடுகடந்த அமைப்பினர் மற்றும் அடிப்படைவாதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு ஆதரவு அணி சஜித் பிரேமதாசவுக்காக திரட்டப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன குற்றஞ்சாட்டியுள்ளார்.
அத்துடன், எம்.ஏ.சுமந்திரன், இரா.சம்பந்தன் ஆகியோர் பிரிவினைவாதிகளையும் அடிப்படைவாதிகளையும் பிரதிநிதித்துவம் செய்யும் பிரிவினராக செயற்பட்டு சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் கூறுகையில், “ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக பல நிபந்தனைகளுக்கு இணங்கியதுடன், பாரிய பிளவுகளுக்கு மத்தியில் சஜித் பிரேமதாச ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் ‘யானை’ சின்னத்தில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்பது அந்த கட்சியின் ஆதரவாளர்களுக்கு கவலைக்குரிய விடயம்.
எந்தக் கட்சியையும் சாராமல் பொது வேட்பாளர்களாக போட்டியிட்ட முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோரைப் போன்றே கட்சியின் பிரதித் தலைவரான சஜித் பிரேமதாசவுக்கும் அன்னம் சின்னத்திலேயே போட்டியிட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
வேட்பாளர் ஒருவரை தெரிவு செய்து கொள்வதற்கான முன்னோடியாக செயற்பட்டவர் நிதியமைச்சர் மங்கள சமரவீர தான். அவரே தமிழீழ விடுதலைப் புலிகளின் நாடுகடந்த அமைப்பினர் மற்றும் அடிப்படைவாதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு ஆதரவு அணியை சஜித் பிரேமதாசவைச் சுற்றி திரட்டியுள்ளார்.
அமைச்சர் ரிஷாட் பதியூதீனே அந்த அணியில் அடிப்படை செயற்பாட்டாளராக இருப்பதுடன் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் பிரிவினைவாதிகளையும் அடிப்படைவாதிகளையும் பிரதிநிதித்துவம் செய்யும் பிரிவினராக செயற்பட்டு சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குகின்றனர்.
இந்த நிலையில் தான் அமைச்சர் சஜித் பிரேமதாச பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு போட்டியாக ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கியுள்ளார்.
அவர்களின் இந்த செயற்பாடு காரணமாகவே மாமன்னரின் பதவி கிடைத்தாலும் இந்த நாட்டை காட்டிக் கொடுக்காத கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இந்த நாட்டு மக்கள் ஆதரவளிக்கத் தீர்மானித்து விட்டார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.