வவுனியாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற தமிழ் மக்கள் கூட்டணியின் அலுவலகத் திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தெரிவிக்கையில், “எமது கட்சி மூன்று விதமான அடிப்படைக் கொள்கைகளைக் கொண்டுள்ளது.
முதலாவது தன்னாட்சி, அதாவது வடக்கு கிழக்கு இணைந்த நிலையில் தமிழ் மக்கள் தம்மைத் தாமே நிர்வகிக்கக் கூடிய அதிகாரங்களைப் பெறவேண்டும். அரசாங்கம் வடக்கு கிழக்கை மேலும் பிரிக்கும் செயற்பாட்டையே மேற்கொண்டு வருகின்றது. இதனால் முல்லைத்தீவு மற்றும் வவுனியாவில் வசிக்கும் மக்களே அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே அரசியல் ரீதியாக தன்னாட்சியைப் பெறுவதற்கு நாம் பயணிக்க வேண்டும்.
அடுத்து தற்சார்பு, அதாவது, அரசியல் ரீதியாக செயற்படும் போது எமது வாழ்கைமுறை எவ்வாறு அமைய வேண்டும் என்பதற்காக தற்சார்பு என்ற அடுத்த கொள்கையை நாம் வகுத்துள்ளோம். நாம் எப்பொழுதும் அடுத்தவரைப் பார்த்து அவர்களிடம் பிச்சை கேட்கும் நிலையை மாற்றி எங்களை நாங்கள் மேம்படுத்த முடியுமா என்பதைப் பார்க்கவேண்டும்.
மூன்றாவதாக தன்னிறைவு, அதாவது வடக்கு கிழக்கானது மக்கள் பொருளாதார ரீதியாக தங்களை வளர்த்துக்கொண்டு தன்னிறைவு பெறக்கூடிய ஒரு பிராந்தியமாக வரவேண்டும். அதனை எவ்வாறு மேற்கொள்ளலாம் என்பதனை நாம் அறிந்து ஆராய்ந்து அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
எமக்குத் தேர்தல் ரீதியான எண்ணங்கள் இருந்தாலும் அதனைவிட மக்களுடைய பிரச்சினைகளைத் தீர்க்கும் ஒரு கட்சியாக வளரவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்” என்று தெரிவித்தார்.