பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தக்கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று இடம்பெற்றுள்ளது.
ஜக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணியின் தலைவர் கே.ஜெகவண்ணன் தலைமையில் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் இந்த பொதுமக்கள் எழுச்சிப் பேரணி இடம்பெற்றது.
கல்லடி மணிக்கூட்டு கோபுரத்தில் இருந்து ஆரம்பமான இப்பேரணி கல்லடி பாலத்தினூடாக கிழக்குப் பல்கலைகழக மருத்துவ பீடத்திற்கு முன்னால் உள்ள சுற்றுவட்டம் வரை சென்று மீண்டும் ஆரம்பித்த இடத்திற்குச் சென்றது.
இப்பேரணியில் கலந்துகொண்ட பொதுமக்கள், சமூக சேவையாளரும் தமக்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீட்டுத் திட்டங்களைப் பெற்றுத்தந்த மக்கள் விரும்பும் தலைவரான சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக கட்சியின் தலைமை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
சஜித் பிரேமதாசவின் படம் பொறிக்கப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு கட்சியின் அமைப்பாளர்கள், ஆதரவாளர்கள், இளைஞர் அணியின் உறுப்பினர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் இப்பேரணியில் கலந்துகொண்டனர்.