பிரித்தானியாவில் வைத்து ரஷ்யாவின் முன்னாள் உளவாளி மீது நச்சுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட விவகாரத்தினைத் தொடர்ந்தே இவ்வாறு மேலதிக பொருளாதாரத் தடை விதிக்கப்படவுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் Morgan Ortagus தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
‘முன்னாள் ரஷ்ய உளவாளி செர்கெய் ஸ்க்ரிபால் மீது நச்சுத் தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில், ரஷ்யா மீது புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படுகின்றன.
இதற்கமைய சர்வதேச நிதி அமைப்புகள் ரஷ்யாவுக்கு கடன் உதவி, நிதி உதவி, தொழில்நுட்ப உதவி அளிப்பதற்குத் தடை விதிக்கப்படுகிறது.
மேலும், ரஷ்ய அரசாங்கத்திற்கு கடன் வழங்குவதில் அமெரிக்க வங்கிகளுக்குக் கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. மேலும், ரஷ்யாவுக்கு பொருட்களையும், தொழில்நுட்பங்களையும் ஏற்றுமதி செய்வதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1990 ஆம் ஆண்டு ரஷ்ய இராணுவ உளவு அமைப்பில் பணியாற்றி வந்த செர்கெய் ஸ்க்ரிபால் (68), பிரித்தானியாவிற்கு இராணுவ இரகசியங்களை வெளியிட்டு வந்தார்.
அவரது நடவடிக்கையைக் கண்டுபிடித்த ரஷ்ய அதிகாரிகள், 2004-ஆம் ஆண்டு செர்கெய் ஸ்க்ரிபாலை கைது செய்து சிறையிலடைத்தனர். எனினும், உளவுக் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் விடுவிக்கப்பட்ட செர்கெய் ஸ்க்ரிபால், பிரித்தானியாவில் வசித்து வருகிறார்.
இந்தநிலையில் செர்கெய் ஸ்கிரிபால் மற்றும் அவரது 35 வயது மகள் யூலியா மீது கடந்த ஆண்டு மார்ச் மாதம் நச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
குறித்த தாக்குதலை ரஷ்ய உளவு அமைப்பினர் மேற்கொண்டதாக பிரித்தானிய புலனாய்வுத் துறை குற்றச்சாட்டுக்களை முன்வைத்தது.
இதனைத் தொடர்ந்து, குறித்த சம்பவத்துக்குப் பொறுப்பேற்குமாறு ரஷ்யாவிற்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் ரஷ்யா மீது அமெரிக்கா ஏற்கெனவே பொருளாதாரத் தடைகளை விதித்திருந்தது.
இந்தநிலையில் அதன் தொடர்ச்சியாக, தற்போது ரஷ்யா மீது அமெரிக்கா மேலதிக பொருளாதாரத் தடைகளை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.