விரைவில் மாவட்ட வைத்தியசாலையாக தரமுயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் விபத்து மற்றும் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல்லை அமைச்சர் இன்று (வெள்ளிக்கிழமை) நாட்டிவைத்தார். இக்கட்டடம் நெதர்லாந்து அரசாங்கத்தின் 1,180 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்படவுள்ளது.
இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், எஸ்.சுகிர்தன் உட்பட வைத்தியர்கள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதில் உரையாற்றிய அமைச்சர், “பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையை மாவட்ட வைத்தியசாலையாக தரம் உயர்த்துமாறு சிவாஜிலிங்கம் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது கோரிக்கை விடுத்திருந்தார். அதேபோன்று இப்போது எம்.ஏ.சுமந்திரனும் இக்கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
அந்தவகையில், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையை மாவட்ட வைத்தியசாலையாக தரமுயர்த்த நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. இதற்கமைய விரைவில் ஆதார வைத்தியசாலை மாவட்ட வைத்தியசாலையாக தரம் உயர்த்தப்படும்” என்றார்.
இதேவேளை, வைத்தியசாலைக்கு குழந்தை வைத்திய அதிகாரி இல்லையெனத் தெரிவிக்கப்பட்ட நிலையில், ஒரு மாதத்தில் குறித்த வெற்றிடத்துக்கான வைத்தியரை நியமிக்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதியளித்தார்.